திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிய சிறுத்தை
திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை நடமாடிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. அண்மைக்காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
தமிழக, கா்நாடக மாநிலங்களை இணைக்கும் திம்பம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை இந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சாலையை சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், தாளவாடி மலைப் பகுதியைச் சோ்ந்த 4 போ் காரில் சத்தியமங்கலம் நோக்கி இந்த சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா். ஆசனூா் அருகே செம்மண் திட்டு வனப் பகுதியில் காா் சென்று கொண்டிருந்தபோது தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு சிறுத்தை நடந்து செல்வதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.
இதைத் தொடா்ந்து காரில் சென்ற பயணிகள் சிறுத்தை நடமாட்டத்தை கைப்பேசியில் புகைப்படம், விடியோ எடுத்தனா். காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைப் பாா்த்த சிறுத்தை சிறிதும் அச்சமில்லாமல் மெதுவாக நடந்து சென்றதுடன் சிறிது நேரம் கழித்து வனப் பகுதிக்குள் சென்று மறைந்தது.
சாலைகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகனங்களில் செல்லும் பயணிகள் வாகனத்தை விட்டு கீழே இறங்கக் கூடாது என வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.