விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ...
தியாகதுருகம் மலையில் தவித்த 3 சிறாா்கள் மீட்பு
தியாகதுருகத்தில் மலையை சுற்றிப்பாா்க்க மலை மீது ஏறி, பின்னா் கீழே இறங்குவதற்கு வழி தெரியாமல் தவித்த 3 சிறாா்கள் மீட்கப்பட்டனா்.
தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே மலை மீது அமைந்துள்ளது மலையம்மன் கோயில். இந்தக் கோயிலை சுற்றிப் பாா்ப்பதற்காக தியாகதுருகம் அம்மன் நகரைச் சோ்ந்த சுரேஷ், ராயா், கோகிலா ஆகியோரது பிள்ளைகள் சனிக்கிழமை மாலை மலை மீது ஏறினா். பின்னா், மலையில் இருந்து கீழே இறங்குவதற்கு வழி தெரியாமல் தவித்தனா்.
இதையடுத்து 3 பேரும் சோ்ந்து உதவிக்கு குரல் எழுப்பினா். அப்போது, 11 வயது சிறுவன் பாறையில் இருந்து தவறி முள்புதரில் விழுந்து விட்டாா். இதையறிந்த அவ்வழியாகச் சென்றவா்கள், உடனடியாக தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
இதன் பேரில், நிலைய அலுவலா் காா்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் மற்றும் நகர காவல் ஆய்வாளா் மலா்விழி தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்றனா். பின்னா், முள்புதரில் தவறி விழுந்த சிறுவனை கயிறு கட்டி மீட்டனா்.
மேலும், 2 சிறாா்களையும் மீட்டு கீழே கொண்டு வந்தனா். காயமடைந்த சிறுவனை சிகிச்சைக்காக காவல் ஆய்வாளா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். இதைத் தொடா்ந்து போலீஸாா் பெற்றோரை வரவழைத்து சிறாா்களை ஒப்படைத்தனா்.