திருமணத்தை மீறிய உறவு... கணவரை கொலை செய்து நாடகமாடிய மனைவி.. ஆண் நண்பருடன் சிக்கிய பின்னணி!
சென்னை கொளத்தூர் நியூ ரெட்டேரி சந்திப்பு பவானி நகரைச் சேர்ந்தவர் ராஜா பாஸ்கர் (45). இவர் டிப்பர் லாரி டிரைவராக வேலைப்பார்த்து வந்தார். இவரின் மனைவி சித்ரா (43). கடந்த தீபாவளி தினத்தன்று மதுவாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த ராஜா பாஸ்கர், வீட்டிலேயே மது அருந்தியிருக்கிறார். பின்னர் அவர் மூச்சு பேச்சு இல்லாமல் படுக்கையில் கிடந்ததாகக் கூறி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் சித்ரா. அங்கு ராஜா பாஸ்கரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து ராஜா பாஸ்கரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக சித்ரா, ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் எஸ்.ஐ ரவிசந்திரன், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சித்ரா மீதே போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. அதனால் ராஜா பாஸ்கரின் சடலத்தை அவரின் அப்பாவிடம் போலீஸார் ஒப்படைத்தனர். இந்தநிலையில் ராஜா பாஸ்கரின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் அவரின் கழுத்தில் காயங்கள் இருப்பதும் கழுத்து எலும்புகள் உடைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் ராஜா பாஸ்கர் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், ராஜமங்கலம் போலீஸாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் சித்ராவின் வீடு அமைந்துள்ள பகுதியிலிருக்கும் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ராஜா பாஸ்கர் ஓட்டும் டிப்பர் லாரியின் ஓனர் தனசேகர் என்பவர் தீபாவளி தினத்தன்று சித்ராவின் வீட்டுக்கு வந்து சென்ற காட்சி பதிவாகியிருந்தது.
இதையடுத்து போலீஸார், சித்ராவிடமும் தனசேகரிடமும் தனித்தனியாக விசாரித்தனர். அப்போது டிரைவர் ராஜா பாஸ்கர், உயிரிழந்த தகவலை இருவரும் முன்னுக்குப் பின் முரணானக் கூறினர். அதனால் சித்ராவின் குழந்தைகளிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், நாங்கள் வீட்டின் வெளியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தோம். வீட்டுக்குள் அம்மாவும் அப்பாவும் மட்டுமே இருந்தனர். காலை முதல் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை நடந்துக் கொண்டிருந்தது என்ற தகவலைத் தெரிவித்தனர். எதற்காக சண்டை போட்டார்கள் என்று விசாரித்தபோதுதான் சித்ராவுக்கும் லாரி ஓனர் தனசேகருக்கும் இடையே இருந்த நட்பு தெரியவந்தது.
அதனால் சித்ரா, தனசேகர் ஆகியோரிடம் மீண்டும் போலீஸார் விசாரித்தபோது ராஜா பாஸ்கரைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து ராஜமங்கலம் போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட சித்ராவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து கணவரைப் பிரிந்து வாழ்ந்திருக்கிறார். பின்னர் டிரைவர் ராஜாபாஸ்கரை இரண்டாவதாக திருமணம் செய்த சித்ரா, கொளத்தூரில் வாழ்ந்திருக்கிறார். குடி பழக்கத்துக்கு அடிமையாக இருந்த ராஜா பாஸ்கர், அடிக்கடி சித்ராவுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது ராஜா பாஸ்கர், ஓட்டும் டிப்பர் லாரியின் ஓனரான தனசேகர், இருவரையும் சமரசப்படுத்தி வந்திருக்கிறார். அதில் தனசேகருடன் சித்ரா நெருங்கி பழகி வந்திருக்கிறார். அதை ராஜா பாஸ்கர், கண்டித்தும் இருவரும் கேட்கவில்லை. சம்பவத்தன்றும் ராஜா பாஸ்கருக்கும் சித்ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தனசேகருக்கு போன் செய்து வீட்டுக்கு வரவழைத்த சித்ரா, இருவரும் சேர்ந்து ராஜா பாஸ்கரை கொலை செய்து விட்டு ஹாட்அட்டாக் என அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை நம்ப வைத்திருக்கிறார்கள். ஆனால் பிரேத பரிசோதனை ரிப்போர்ட், கொலையை காட்டிக் கொடுத்து விட்டது. கைது செய்யப்பட்ட சித்ரா, லாரி ஓனர் தனசேகர் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb