உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரம...
``திருமணம் மீறிய உறவில் மனைவி'' - 2 குழந்தைகளை கொன்றுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட தொழிலாளி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலுள்ள தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (42). இவருக்கும், ஆரணி அருகேயுள்ள ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி (32) என்பவருக்கும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 9 வயதான கயல்விழி என்ற மகளும், 7 வயதான நிதர்சன் என்ற மகனும் இருந்தனர்.
இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புத் தேடி குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார் கிருஷ்ணன். அங்கு வேலை செய்தபடியே, பிள்ளைகளையும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்திருந்தார்.

இதனிடையே, பூங்கொடிக்கு வேறு ஒருவருடன் திருமணத்திற்கு மீறிய தொடர்பு ஏற்பட்டது. இது தெரியவந்ததும் மனவேதனைக்குள்ளான கிருஷ்ணன் கடந்த ஒரு வருடமாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். பிள்ளைகளையும் தனது அரவணைப்பிலேயே பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊரான தெள்ளூர் கிராமத்துக்கு பிள்ளைகளை அழைத்துவந்தார் கிருஷ்ணன். பண்டிகை முடிந்து ஒரு வாரமாகியும் சென்னைக்கு திரும்பாமல் இருந்தார்.
இதையடுத்து, இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாமல் இருந்ததை கவனித்த அக்கம் பக்கத்து உறவினர்கள் அவரது வீட்டுக்குச் சென்றனர். அப்போது, கிருஷ்ணன் தூக்கில் சடலமாகவும், அவரது இரு பிள்ளைகளும் தரையில் சடலமாகவும் சுருண்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக சேத்துப்பட்டு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் மூன்று உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், தாயின் ஏக்கத்தில் இருந்த பிள்ளைகளுக்காக மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பியிருந்தார் கிருஷ்ணன். ஆனால், மனைவி பூங்கொடி தனது காதலன் மீதான ஆசையால் பிள்ளைகளையும் பார்க்க விரும்பாமல், கணவனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை எனத் தெரிவித்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட துயர்மிகுதியால், தூங்கிக்கொண்டிருந்த இரு பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, கிருஷ்ணன் தனது உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் நடந்த வீட்டில் இருந்து கிருஷ்ணன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றியிருக்கின்றனர். அதில், ``என் சொத்து, நகை எல்லாம் வாங்கிக்கொண்டு ஏமாற்றினாள். குழந்தைகள் மேல் கொஞ்சம்கூட பாசம் இல்லை. அவளிடம் விட்டுச்சென்றால், ஆகாரம் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைகள் இறப்பதைவிட என்னிடம் இறப்பது நல்லது. அவளின் குடும்பம் சரி இல்லை’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த கடிதத்தை வைத்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைக் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.













