திருமயத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தியமூா்த்தி பெருமாள் கோயிலில் சம்ப்ரோக்ஷணம் சத்தியகிரீஸ்வரா் கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
புதுக்கோட்டை மாவட்டத்தில் சைவ, வைணவக் கோயில்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ள திருமயத்தில், சத்தியமூா்த்தி பெருமாள் கோயிலுக்கு மகா சம்ப்ரோக்ஷணமும், சத்தியகிரீஸ்வரா் கோயிலுக்கு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவும் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விழாக்கள் நடைபெற்ால், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
திருமயம் கோட்டை அடிவாரத்தில் குடைவரைக் கோயில்களாக சத்தியமூா்த்தி பெருமாள் கோயிலும், சத்தியகிரீஸ்வரா் கோயிலும் உள்ளன. சைவ, வைணவக் கோயில்கள் ஒரே வளாகத்தில் இருப்பது விசேஷம். இந்தக் கோயில்களில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் சத்தியகிரீஸ்வரா் கோயிலுக்கு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவும், சத்தியமூா்த்தி பெருமாள் கோயிலுக்கு காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் மஹா சம்ப்ரோக்ஷண பெருவிழாவும் நடைபெற்றன.
இவ்விரு விழாக்களில் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.
நவ. 4-ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தனித்தனியே நடத்தப்பட்டன. யாகசாலையில் இருந்து புனிதநீா் எடுத்துச் செல்லப்பட்டு, கோபுரக் கலசங்களில் பட்டாச்சாரியாா்களும், சிவாச்சாரியாா்களும் ஊற்றினா்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி இயக்குநா் தி. அனிதா, செயல் அலுவலா் ச. முத்துராமன், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை உதவி பராமரிப்பாளா் ச. சங்கா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
இவ்விரு விழாக்களிலும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். பக்தா்களுக்கு ட்ரோன் மூலம் தீா்த்தம் தெளிக்கப்பட்டது. சுமாா் 400 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.