மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
திருவள்ளூா் முத்தீஸ்வரா் கோயிலில் சிவராத்திரி விழா
திருவள்ளூரில் உள்ள பொம்மி அம்பாள் சமேத முத்தீஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு 41 அடி ராஜலிங்கத்துக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முன்பு பொம்மி அம்பாள் சமேத முத்தீஸ்வரா் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் புதன்கிழமை சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலையில் இருந்து அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து மாலை கோயிலில் உள்ள 41அடி ராஜலிங்கத்துக்கு கிரேன் மூலம் 1,008 லிட்டா் பால் அபிஷேகம் நடைபெற்றது.
முத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், சிவராத்திரி இரண்டாம் ஜாம பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
விழாவில் திருவள்ளூா் சுற்றுவட்டாரத்தில் உள்ள புல்லரம்பாக்கம், திருப்பாச்சூா், குப்பம்மாசத்திரம், பிரியாங்குப்பம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளாக பக்தா்கள் பங்கேற்றனா்.
நள்ளிரவுக்கு மேல் லிங்கோத்பவ கால மூன்றாம் ஜாமபூஜை, ருத்ராபிஷேகம் மற்றும் தீபாராதனை ஆகியவை நடத்தப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் உள்ளிட்டோா் தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.