திரௌபதி அம்மன் கோயில் விவகாரம்: `அனைத்து தரப்பினருக்கும் அனுமதி; அதேசமயம்...' - நீதிமன்றம் உத்தரவு!
விழுப்புரம் மாவட்டம், வளவனூருக்கு அருகே மேல்பாதி கிராமம் அமைந்துள்ளது . இங்கு சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு 2016 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் 2022ஆம் ஆண்டு தர்மர் பட்டாபிஷேக விழாவும் நடைபெற்றது.
திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியலின சமூக மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு, மாற்றுச் சமூகத்தினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வந்துள்ளனர். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி விழா நடைபெற்றது. அப்போது சாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞர் கதிரவனை அங்கிருந்த மாற்றுச் சமூகத்தினர் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து இளைஞரை மீட்க வந்த அவரது பெற்றோரையும் தாக்கியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட தரப்பினர் அன்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டதோடு போலீஸாரிடமும் புகார் அளித்தனர்.

இரு தரப்பினரும் போலீஸில் புகாரளித்து, வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க... ஊர் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டனர். போலீஸார் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இரு தரப்பினருக்கும் இடையே பலமுறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் சுமுக முடிவு ஏற்படாமலே இருந்து வந்தது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காலை 6:30 மணி அளவில் இந்த கிராமத்தில் நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரு தரப்பை சேர்ந்தவர்களும், அவர்களை சேர்ந்தவர்களும் என யாருமே கோயிலுக்குள் நுழையக்கூடாது என 145 ஆவது சட்டப்பிரிவின்படி போலீஸார் முன்னிலையில் வருவாய் துறையினர் கோயிலைப் பூட்டி சீல் வைத்தனர்.

இதனால் மேல்பாதி கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியதால் எந்த ஓர் அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் ஜூன் 9ஆம் தேதி இரு தரப்பினரும் தனது அலுவலகத்தில் ஆஜராகி, உரிய ஆவணங்களுடன் எழுத்துப்பூர்வ பதில் அளிக்க வேண்டும் என விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். அதன்படி இரு தரப்பினரும் ஆஜராகி அந்த விசாரணை கூட்டத்தில் கலந்து கொண்டனர். எனினும் சுமுக முடிவு ஏற்படாமல் போகவே... மறு விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட விசாரணை ஜூலை 7ஆம் தேதி நடைபெற்றதில், இரு தரப்பினரும் கலந்துகொண்டு தங்களது வாதத்தை முன்வைத்தனர். இதில் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்துப் பேசிய பட்டியலின மக்கள் தரப்பு வழக்கறிஞர், ``ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் கோயிலுக்குள் அழைத்துச் செல்லவில்லை என்றால், சாதியின் பெயரால் எங்களை இழிவுபடுத்தும் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது என முடிவை எடுத்திருக்கிறோம். மேலும் ஒன்றாம் தேதி முதலே பட்டியலின மக்கள் குடியிருப்பு பகுதியில் கறுப்புக்கொடி ஏற்றுவது எனவும் முடிவு செய்து இருக்கிறோம்" என ஆவேசமாகக் கூறினார் .
அதையடுத்து, பட்டியலின மக்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது எனக் கூறி, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோயிலின் அறங்காவலர் ராஜி மற்றும் மேல்பாதி கிராமவாசிகள் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோயிலில் பூஜைகள் நடத்த அனுமதி அளித்தார்.

மேலும் பூஜைகளைச் செய்யப் பூசாரி ஒருவரை வேலைக்கு நியமிக்கும்படி இந்து சமய அறநிலையத்துறையினரிடம் கூறினார். பூஜைகள் முடிந்ததும் கோயிலை பூட்டிவிட வேண்டும் எனவும், வேறு எவரையும் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டார். அத்துடன் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால், அவர்களுக்கு எதிராக காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இந்த நிலையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கோயில் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜி என்பவர் வழக்கு தொடர்ந்தார்,
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி, கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை, பூசாரிகள் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதாகவும், கடந்த 2 ஆண்டுகளாகத் திரௌபதி அம்மன் கோயிலில் திருவிழா நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, காலை 6 மணி முதல் 7 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களை ஏற்ற நீதிபதி, திரௌபதி அம்மன் கோயிலில் அனைத்து தரப்பினரும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த எவரேனும் முயன்றால் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் காவல்துறையினர் முன்வர வேண்டும் என்று உத்தரவிட்டார்.