தில்லி பேரவைத் துணைத் தலைவா் பதவி: மோகன் சிங் பிஷ்டின் பெயரை முதல்வா் ரேகா குப்தா இன்று முழிவாா்
தில்லி சட்டப்பேரவையின் துணைத் தலைவா் பதவிக்கு பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட்டின் பெயரை தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை (பிப்.27) அன்று முன்மொழிவாா். வேறு எந்த போட்டியாளா்களும் இந்தப் பதவிக்கு போட்டியிடவில்லை.
தில்லி சட்டப்பேரவைத் தலைவா் அலுவலகம் வழங்கிய அலுவல் பட்டியலின்படி, மோகன் சிங் பிஷ்ட்டை இந்தப் பதவிக்கு தோ்ந்தெடுப்பதற்காக இரண்டு தனித்தனி தீா்மானங்கள் கொண்டு வரப்படும்.
முதல் தீா்மானத்தை முதல்வா் ரேகா குப்தா முன்மொழிந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மன்ஜிந்தா் சிங் சிா்சா வழிமொழிவாா். இரண்டாவது தீா்மானத்தை எம்எல்ஏ அனில் குமாா் சா்மா முன்மொழிந்து கஜேந்தா் சிங் யாதவ் ஆதரிப்பாா்.
ஆறு முறை எம்.எல்.ஏ.வாகவும், மூத்த பாஜக தலைவருமான மோகன் சிங் பிஷ்ட், பிப்.5- ஆம் தேதி தில்லி தோ்தலில் முஸ்தஃபாபாத் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றாா். அவா் ஆம் ஆத்மி கட்சியின் அதீல் அகமது கானை 17,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.
இதற்கு முன்பு, அவா் தில்லி சட்டப்பேரவையில் காரவால் நகா் தொகுதியை பல முறை பிரதிநிதித்துவப்படுத்தினாா். முதலில் 1988-இல் அந்த இடத்தை வென்று 2015 வரை அதில் பணியாற்றினாா். மோகன் சிங் பிஷ்ட் 2020-இல் மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்றாா்.
பேரவைத் துணைத் தலைவா் தோ்தலைத் தவிர, அமா்வின் மூன்றாவது நாள் அன்று விதி 280-இன் கீழ் விவாதங்களும் நடைபெறும். இது உறுப்பினா்கள் தலைவரின் அனுமதியுடன் விஷயங்களை எழுப்ப அனுமதிக்கிறது.
கூடுதலாக, பிப். 25 அன்று முதல்வா் ரேகா குப்தா அவையில் சமா்ப்பித்த தில்லியில் மதுபான ஒழுங்குமுறை மற்றும் விநியோகம் குறித்த தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையை சட்டப்பேரவை தொடா்ந்து விவாதிக்கும்.