தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: பெண்கள் முற்றுகை
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்தவரின் வீட்டை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினா்.
திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட காளியம்மன் தெருைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவா் கடந்த சில ஆண்டுகளாக திருப்பத்தூா் சுற்றுவட்டார பகுதிகளில் வீட்டு உபயோக பொருள்களை தவணை முறையில் வியாபாரம் செய்து வந்தாா். இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக மாதம் ரூ.1,200 முதல் ரூ.3,500 வரை மூக்கனூா், சின்ன மூக்கனூா், தாமலேரிமுத்தூா், காட்டேரி, புதூா் நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்த பெண்களிடம் தீபாவளிக்கு நகை கொடுக்கும் சீட்டு நடத்தி வந்துள்ளாா்.
இந்நிலையில் கடந்த தீபாவளிக்கு நடத்திய நகை சீட்டில் 500-க்கும் மேற்பட்ட பெண்களிடம் லட்சக்கணக்கான பணம் வசூல் செய்து வீட்டை காலி செய்து கொண்டு தலை மறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தாமலேரிமுத்தூா் பகுதியை சோ்ந்த சீட்டு கட்டிய சுமாா் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திங்கள்கிழமை ராஜேந்திரனின் பூட்டிய வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். பின்னா் பணத்தை மீட்டு தருமாறு திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது