`துணிஞ்சு ஆரம்பிச்சிட்டோம்; ஆனா ஹெவி வேலை..!’ - மிர்ச்சி செந்தில் - ஶ்ரீஜா ஜோடியின் புது பிசினஸ்
நடிகர் மிர்ச்சி செந்தில் - ஶ்ரீஜா தம்பதி, கேரள மாநிலம் திருவல்லாவில் புதிய ஹோட்டல் ஒன்றைத் திறந்துள்ளனர். ஹோட்டலின் நிர்வாகத்தை ஶ்ரீஜா கவனித்துக் கொள்கிறாராம்.
எஃப்.எம். ரேடியோ பிரபலமாக இருந்த சமயத்தில், மிர்ச்சி ரேடியோவில் ரேடியோ ஜாக்கியாக அறிமுகமானவர் செந்தில். ரேடியோவில் இவரின் குரலுக்கென தனி ரசிகர் கூட்டம் இருந்தது எனச் சொல்லலாம். இளையராஜாவின் பாடல்களுடன் இரவில் இவர் தொகுத்து வழங்கிய 'நான் நீங்க ராஜா சார்' நிகழ்ச்சி பண்பலை ஏரியாவில் பலமாகக் கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் சினிமா வாய்ப்புகளும் இவரைத் தேடி வரத் தொடங்கின. இயக்குநர் சேரனின் 'தவமாய் தவமிருந்து' படத்தில் அவருக்கு அண்ணனாக நடித்தார்.

தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனாலும் ஏனோ சினிமா இவருக்கு அவ்வளவாக செட் ஆகவில்லை.
தொடர்ந்து சீரியல் பக்கம் வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடர் சீரியல் ஆடியன்ஸ் மத்தியில் இவரை பெரிய அளவில் கொண்டு சேர்த்தது.
ஒருகட்டத்தில் இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த ஶ்ரீஜாவுக்கும் இவருக்குமிடையே காதல் மலர, ஒரு நல்ல நாளில் திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்குப் பிம்ன் சில காலம் நடிப்புக்குப் பிரேக் விட்டிருந்தார் ஶ்ரீஜா. ஆனாலும் சேனல்கள் இவர்களை விடவில்லை. 'மாப்பிள்ளை' என்ற சீரியல்களில் திரும்பவும் ஜோடியாக நடித்தனர். 'மாப்பிள்ளை' க்குப் பிறகு ஶ்ரீஜா சீரியல்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். ஆனால் செந்தில் ரேடியோ வேலையையும் விடாமல் சீரியலிலும் நடித்து வருகிறார். தற்போது ஜீ தமிழ் சேனலில் 'அண்ணா' சீரியல் போய்க் கொண்டிருக்கிறது.

இன்னொருபுறம், வெப்சீரிஸ், மற்றும் சொந்தமான யூ டியூப் சேனல்கள் என பிஸியாக இயங்கத் தொடங்கிய வேளையில தான் ஶ்ரீஜா தாய்மையடைந்து மகனைப் பெற்றெடுத்தார்.
மகனைப் பெற்றெடுப்பதற்காக கேரளா சென்ற ஶ்ரீஜா தொடர்ந்து கேரளாவிலேயே இருந்து வந்தார். நடிகை நயன்தாராவின் சொந்த ஊரான திருவல்லாவில்தான் ஶ்ரீஜாவின் வீடும் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது அங்கு சொந்தமாக கஃபே ஒன்றைத் தொடங்கியிருக்கிறது இந்த ஜோடி.
`அவங்க ஒரு முடிவு எடுத்தா..!'
இது தொடர்பாக செந்திலிடம் பேசிய போது,
''மகன் வல்லபதேவ் பிறந்ததுல இருந்து அவனைக் கவனிச்சிக்கிடறதுலயே அவங்களுக்கு நேரம் சரியா இருந்தது. அதனால சீரியல், வெப் சீரிஸ்னு எதையும் யோசிச்சுப் பார்க்க முடியல. இதுக்கிடையில் திருவல்லாவில ஒரு கஃபே விலைக்கு வந்தது. முன்னாடி நடத்திட்டிருந்தவங்களால் தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் அதை வாங்கிப் பண்ணலாம்னு ஶ்ரீஜா சொன்னாங்க.

அவங்க ஒரு முடிவு எடுத்தா அது தெளிவானதா, சரியானதாகவே இருக்கும்கிறதால உடனே துணிஞ்சு ஓ.கே. சொல்லிட்டேன். ஆனா நாங்க நினைச்ச மாதிரி இல்ல. பெரிய வேலையா தெரியுது. ஷூட்டிங், முடிச்சா வீடுனு இருந்தவன் இப்ப ரெண்டு நாள் லீவு கிடைச்சாலும் கேரளாவுக்குப் போய் அங்க கஃபே வேலைகள்ல இறங்க வேண்டியதாகிடுது. மத்தபடி கஃபே நிர்வாகம் முழுக்க ஶ்ரீஜாவே பார்த்துக்கிடுறாங்க. கொஞ்சம் செட் ஆகிற வரை கொஞ்சம் மலைப்பா தெரியும்னு நினைக்கிறேன், பார்த்துக்கலாம்'' என்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
