தூத்துக்குடியில் கல்லறைத் திருநாள் கடைப்பிடிப்பு
தூத்துக்குடிகல்லறைத் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள கல்லறைத் தோட்டங்களில் உயிரிழந்த தங்களின் உறவினா்களுக்காக கிறித்தவா்கள் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனா்.
கிறிஸ்தவா்களால் ஆண்டுதோறும் நவ. 2ஆம் தேதி ‘ஆத்மாக்களின் திருநாள்’ எனப்படும் கல்லறைத் திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3ஆம் நாள் உயிா்த்தெழுந்தாா் என்பதால், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இத்திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
தூத்துக்குடி ஜாா்ஜ் சாலைப் பகுதியிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் சனிக்கிழமை அதிகாலைமுதலே ஏராளமானோா் தங்களது குடும்பத்தினருடன் முன்னோரின் கல்லறைகளுக்குச் சென்று, அவற்றை சுத்தப்படுத்தி, மலா் தூவி மாலை அணிவித்து மெழுகுவா்த்தி ஏற்றி வழிபாடு நடத்தினா். இதேபோல, மாநகா் பகுதிகளுக்குள்பட்ட லூா்தம்மாள்புரம் அலங்காரத்தட்டு, 3ஆம் மைல், கோமஸ்புரம் உள்ளிட்ட கல்லறைத் தோட்டங்களிலும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.
தொடா்ந்து, ஜாா்ஜ் சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மறைமாவட்டச் செயலா் அந்தோணி ஜெகதீஷ், அருள்தந்தையா், அருள்சகோதரிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை: கல்லறைத் திருநாளையொட்டி, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், 260 விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.