புதுச்சேரி த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் | Photo Album
தூத்துக்குடி: போலி 500 ரூபாய் நோட்டை திருடி சில்லரை மாற்றியவர் கைது - விசாரணையில் அதிர்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். மளிகைக்கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு நேற்று இரவு எட்டயபுரம், கான்சாபுரம் பகுதியில் உள்ள ஹோட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரியும் கோவில்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ரூ.500 கொடுத்து சில்லரை மாற்றிக்கொண்டார்.
அவர் சென்ற சிறிது நேரத்தில், அவர் கொடுத்த ரூ.500 நோட்டு போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சரவணனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் அந்த 500 ரூபாய் நோட்டை தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு சமையல் மாஸ்டரான அசாம் மாநிலம் தேஸ்பூரைச் சேர்ந்த குமார் சர்மாவின் பர்சில் இருந்து திருடியதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, குமார் சர்மாவை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர், “5 மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் ‘ரூ.1 லட்சம் நல்ல நோட்டுகளை கொடுத்தால், இரட்டிப்பாக ரூ.2 லட்சம் வழங்குகிறோம்’ என்ற விளம்பரத்தைப் பார்த்து, அந்த விளம்பரத்தை கொடுத்த நபர்களை தொடர்பு கொண்டேன்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் மும்பை சென்று, அவர்களிடம் ரூ.1 லட்சத்தை கொடுத்து, ரூ.2 லட்சம் கள்ளநோட்டுகளை பெற்றுக்கொண்டு எட்டயபுரம் வந்ததாகவும் கூறியுள்ளார்.
இங்கு வந்து பார்த்தபோது, அதில் ரூ.2 ஆயிரத்திற்கு மட்டும் நான்கு 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததையும், மற்றவை குழந்தைகள் விளையாடும் போலி 500 ரூபாய் நோட்டுகளாகவும், வெள்ளை பேப்பர்களை கட்டுகளாக வைத்து ஏமாற்றியுள்ளனர்.

இதனால் அந்த போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடாமல் பையில் வைத்திருந்தேன். ஆனால், சரவணன் எனக்குத் தெரியாமல் அதை திருடி, கடையில் கொடுத்து சில்லரை மாற்றியுள்ளார் எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அவரிடமிருந்த 67 போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்ததுடன் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், மும்பையை சேர்ந்த மோசடி கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




















