நெருங்கும் புயல்; கொட்டித் தீர்க்கும் கனமழை; சென்னையைச் சூழும் வெள்ளநீர் - நிலவர...
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் “ஃபெஞ்சல்” புயல்": 7 நாள்களுக்கான மழை எச்சரிக்கை
தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஃபென்ஜால் புயல் மீண்டும் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள நிலையில், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை(டிச.1) காலை கரையை கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு மாமல்லபுரம் வருகை தந்துள்ளனர்.
கனமழை எச்சரிக்கை வரப்பெற்ற செங்கல்பட்டு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தலா 3 குழுக்களும், கடலூர், தஞ்சாவூர், திருவாருர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு தலா 2 குழுக்களும் ஆக மொத்தம் 18 பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் “ஃபெஞ்சல்” புயல் நிலவரங்கள் குறித்து விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் “ஃபெஞ்சல்” புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, சனிக்கிழமை காலை (நவ.30) 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் புயலாக, புதுச்சேரியில் இருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 120 கி.மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 110 கி.மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுச்சேரி காரைக்காலுக்கும் – மாமல்லபுரத்திற்கும் இடையே சனிக்கிழமை மாலை புயலாக கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்திலும்,இடையிடையே 90 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
நவ.30: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.
டிச.1: ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.2: திங்கள்கிழமை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.3: செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.4: புதன்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச.5 மற்றும் டிச.6: வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தரைக்காற்று எச்சரிக்கை:
சனிக்கிழமை(நவ.30) வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.
மழைப்பதிவு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியில் மிதமான அளவில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகி உள்ளது.
சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு
எண்ணூர், கத்திவாக்கம் (சென்னை), திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர் பகுதிகளில் தலா 9 மி.மீட்டரும், பொன்னேரி (திருவள்ளூர்), மணலி, ஐஸ் ஹவுஸ், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 8 மி.மீட்டரும், அடையார், ஆலந்தூர், கொளத்தூர், நந்தனம், மாதவரம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஆட்சியர் அலுவலகம், டிஜிபி அலுவலகம்,சோழிங்கநல்லூர், புழல் ஆகிய பகுதிகளில் தலா 7 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை
தமிழகத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 31.9° செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக ஈரோடு: 16.2° செல்சியஸ் பதிவாகியுள்ளது.