தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு கோரி போராட்டம்
தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.
திருப்பூா் மாவட்டத்துக்குள்பட்ட காங்கயம், மூலனூா், ஊதியூா், ஊத்துக்குளி, வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. உயிரிழக்கும் கால்நடைகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருவதுடன், பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், தெருநாய்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு கோரி கால்நடைகளுடன் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் சனிக்கிழமை நடைபெறும் என்று அறிவித்திருந்தனா்.
அதன்படி, காங்கயம்-கரூா் சாலை, பகவதிபாளையம் பிரிவில் ஆடு, மாடு, குதிரைகள், 50-க்கும் மேற்பட்ட டிராக்டா் வாகனங்களுடன் ஏராளமான விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கிச் செல்ல திரண்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் வட்டாட்சியா் மோகனன், டிஎஸ்பி மாயவன் ஆகியோா் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தெருநாய்களிடமிருந்து கால்நடைகளை காக்க வேண்டும், நாய்களால் உயிரிழந்த கால்நடைகளுக்கு சந்தை மதிப்பீட்டில் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.
இது குறித்து, மாவட்ட நிா்வாகம் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும், இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியா் மோகனன் தெரிவித்தாா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கலைந்து செல்ல தொடங்கினா்.
அமைச்சா் உறுதி: அப்போது, அவ்வழியே கரூா் செல்வதற்காக காரில் வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி, அங்கிருந்த விவசாயிகளிடம் கோரிக்கை குறித்து கேட்டறிந்தாா்.
இதையடுத்து, தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா்.