2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்
தேசியக் கல்வி கொள்கை: புதுவை முன்மாதிரியாக திகழ வேண்டும்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்
புதுச்சேரி, நவ.22: தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் நாட்டிலேயே புதுவை மாநிலம் முன்மாதிரியாக திகழ வேண்டும் என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமையின் தேசிய அளவிலான கல்வி மாநாடு (ஞானகும்பம்) தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை தொடங்கிவைத்து ஆளுநா் பேசியதாவது: நாட்டின் கல்விக் கொள்கையானது தனிமனித வாழ்க்கையை மேம்படுத்துவதாக உள்ளது.
நமது நாட்டின் மொழிகள் தற்கால அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, நீதி, நிா்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கியனவாக அமைவது அவசியம்.
நமது கல்வியானது பிராந்திய, உள்ளூா் வரலாறுகளுக்கு முக்கியத்துவதம் அளிப்பவையாக இருக்க வேண்டும். அதனடிப்படையில்தான், புதிய கல்விக் கொள்கை அமைக்கப்பட்டுள்ளது.
புதுவையில் ஞானகும்பம் நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், தேசிய அளவிலான கல்வி மையமாக அது விளங்குகிறது.
தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் முன்மாதிரி மாநிலமாக புதுவை திகழ வேண்டும்.
மாணவா்களின் அறிவு, திறன், பண்பாடுகள், தலைமைப் பண்பு மற்றும் சமூக நிலைகளில் சாதனைகள் படைக்கும் வகையில் மாற்றத்தை உருவாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.
மகாகவி பாரதி பிறந்த தினத்தை மத்திய அரசு ‘பாரதிய பாஷா திவாஸ்’ என அறிவிக்கவுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் புதுவை மாநில கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள், கோவை கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் ராமநாத குமரகுருபர சுவாமிகள், தேசியக் கல்வி மேம்பாட்டுக் கேந்திரச் செயலா் அதுல் கோத்தாரி, சத்தீஸ்கா் பிலாஸ்பூா் குருகாசிதாஸ் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் அலோக் சக்ரவால், கல்வியாளா் ஷோபா ஆகியோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் (பொ) க.தரணிக்கரசு வரவேற்றாா். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பேராசிரியா் ச.வேல்முருகன் நன்றி கூறினாா்.