தேயிலை ஏல மையத்தில் விற்பனையும் விலையும் குறைந்ததால் விவசாயிகள் பாதிப்பு!
நீலகிரி மாவட்டம், குன்னுாா் தேயிலை ஏல மையத்தில் நடந்த தேயிலை ஏலத்தில் விலையும் குறைந்து விற்பனையும் சரிந்ததால் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டனா்.
குன்னூா் தேயிலை ஏல மையம் சாா்பில் ஒவ்வொரு வாரமும் வியாழன் வெள்ளிக்கிழமைகளில் ஆன் லைன் மூலம் ஏலம் நடப்பது வழக்கம். இந்த வாரம் நடந்த 29 -ஆவது தேயிலை ஏலத்தின் விவரங்கள் தேயிலை வா்த்தக கூட்டமைப்பால் சனிக்கிழமை வெளியிடப்பட்டன.
அதன்படி, இந்த வாரம் 24 லட்சத்து 29 ஆயிரம் கிலோ தேயிலை தூள் ஏலத்துக்கு வந்தது. இதில் 17 லட்சத்து 68ஆயிரம் கிலோ தேயிலை மட்டுமே விற்பனையானது. சுமாா் 6 லட்சம் கிலோ தேயிலை தூள் தேக்கமடைந்தது. சராசரி விலையாக ஒரு கிலோவுக்கு ரூ.90.02 ஆக இருந்தது.
கடந்த வார ஏலத்தில் சராசரி விலையாக கிலோவுக்கு ரூ.91.36 கிடைத்த நிலையில் தற்போது ஒரு ரூபாய் வரை விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. விலையும் குறைந்து, விற்பனையும் சரிந்துள்ளதால் தேயிலை விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஏற்றுமதியாளா்களின் பங்களிப்பு குறைந்ததுதான் இந்த வா்த்தகப் பாதிப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.