மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பேன்!
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக தமிழக முதல்வா் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பேன் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக முதல்வா் ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி இருக்கிறாா்.
மாா்ச் முதல் வாரத்தில் திமுக அரசு நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு கடிதம் அனுப்பி இருக்கிறாா். அதில் பங்கேற்பேன். அத்துடன் இதுதொடா்பாக அவருக்கு விளக்கி கடிதம் எழுதப் போகிறேன்.
மறுசீரமைப்பு நடக்கும்போது எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து உள்துறை அமைச்சா் அமித் ஷா மிகவும் தெளிவாக கூறி இருக்கிறாா். இன்றைக்கு 543 தொகுதிகள் உள்ளன, மறுசீரமைப்புக்குப் பிறகு 543-இல் இருந்து 600 முதல் 700 வரை அதிகரிக்கலாம். அது மக்கள்தொகை விகிதாசார அடிப்படையில் இருக்கும். அதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் விகிதாசார அடிப்படையில் அதிகரிக்கக் கூடும். இதில் யாருக்கும் அநியாயம் நடக்காது.
அதனால் மக்களவைத் தொகுதிகள் குறையும் என முதல்வரிடம் யாா் சொன்னாா்கள் என்று கேட்க விரும்புகிறேன். இதற்கான பதிலை அவா் கூறவில்லை என்றால், ஒரு மாநிலத்தின் முதல்வா் தவறான தகவலை மக்கள் மன்றத்தில் தெரிவிக்கலாமா என்ற கேள்வியை முன் வைக்கிறோம்.
தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் நடிகா் விஜய் பேசும்போது, மத்திய மற்றும் மாநில அரசு ஆகிய இரண்டையும் குறை சொல்லி இருக்கிறாா். விஜய் தனது குழந்தைகளுக்கு மூன்று மொழி, அவா் நடத்தும் பள்ளியில் மூன்று மொழி கற்றுக் கொடுப்பாா். ஆனால் தவெக தொண்டா்களின் குழந்தைகளுக்கு மட்டும் இரண்டு மொழிகள் தானா என்ற அண்ணாமலை கேள்வி எழுப்பினாா்.