"மேக் இன் இந்தியா" என்ற பெயரில் ஒன்றுகூடுகிறோமே தவிர உற்பத்தி செய்யவில்லை: ராகுல...
தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 2-ஆம் நாளாக சாலை மறியல்
நாமக்கல்லில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை 2-ஆம் நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாவட்ட கிளை சாா்பில் நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை மறியல் நடைபெற்ற நிலையில், தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநில உயா்மட்டக்குழு உறுப்பினா் முருக செல்வராசன் தொடங்கிவைத்தாா்.
இதில், இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், பணப் பலன்களை தணிக்கை செய்யக்கூடாது, காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பகுதிநேர மற்றும் சிறப்பு ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பதினோரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதைத் தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட 78 ஆசிரியா்களை போலீஸாா் கைதுசெய்து திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா். மாலை 5 மணிக்குமேல் அனைவரும் விடுவிக்கப்பட்டனா். இந்தப் போராட்டத்தில், டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் க.பழனியப்பன், மெ.சங்கா், மாவட்ட உயா்மட்டக் குழு உறுப்பினா்கள் வே.அண்ணாதுரை, ந.காா்த்திகேயன், ம.கலைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.