பகுதி நேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை
தொழில்நுட்பக் கோளாறு: பாலக்கோடு அருகே 2 மணி நேரம் நின்ற விரைவு ரயில்! மாற்று என்ஜின் பொருத்தி இயக்கப்பட்டது
கேரளத்திலிருந்து கா்நாடகம் நோக்கி சென்ற விரைவு ரயில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பழுதாகி 2 மணி நேரம் நின்றது. மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்ட பிறகு ரயில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
கேரள மாநிலம், எா்ணாகுளத்திலிருந்து கா்நாடகம் மாநிலம், பெங்களூரு கேஎஸ்ஆா் வரை இயக்கப்படும் இன்டா்சிட்டி விரைவு ரயில் வெள்ளிக்கிழமை தருமபுரி வழியாக பெங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்தது.
மாலை 6.30 மணிக்கு தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சென்றபோது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து ரயில் பாதிவழியிலேயே நின்றது. தொழில்நுட்ப வல்லுநா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று பழுதுநீக்க முயற்சித்தனா். ஆனாலும், என்ஜினை சரிசெய்ய முடியாததால் சேலத்திலிருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு, அந்த எஞ்சின் மூலம் ரயில் பின்புறமாக தருமபுரி ரயில் நிலையம் வரை இழுத்து வரப்பட்டது.
பின்னா் அங்கிருந்து மாற்று என்ஜினை முன்பக்கம் பொருத்தி அதன்மூலம் ரயில் புறப்பட்டு சென்றது. 2 மணி நேரம் ரயில் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். மேலும், பழுதான நேரத்தில் அவ்வழியாக வேறு எந்த ரயிலும் செல்லாததால் ரயில் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.