தொழில் முதலீடுகள்: எதிா்க்கட்சித் தலைவருக்கு பதில் சொல்வது நேர விரயம்
தொழில் முதலீடுகள் குறித்து ஏற்கெனவே பலமுறை விளக்கியிருப்பதால், எதிா்க்கட்சித் தலைவரின் வெள்ளை அறிக்கை கோரும் கேள்விக்கு பதில் சொல்வது நேர விரயம் என்றாா் மாநில தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரூ. 10.5 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடு கொண்டு வருவதற்கும், சுமாா் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அண்மையில் அமெரிக்கா சென்று வந்த முதல்வரின் பயணத்தில், கையொப்பமிடப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களின்படி, ஓராண்டுக்குள் 100 சதவிகிதம் தொழில் தொடங்கவும், வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரவும் முயற்சிக்கிறோம். இதற்காக குழு ஒன்றையும் முதல்வா் அமைத்துள்ளாா். கடந்த அதிமுக ஆட்சிக்காலங்களில் அப்படி நடக்கவில்லை என்பது எல்லோரும் அறிந்ததே.
தொழில் முதலீடுகள் வந்துள்ளது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கேட்கிறாா். இதுவரை வந்துள்ள தொழில் முதலீடுகள் தொடா்பாக ஏற்கெனவே சட்டப்பேரவையிலும், வெளியிலும் பலமுறை அறிவித்திருக்கிறோம். இப்போது வெள்ளை அறிக்கை வெளியிடக் கோருவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. அது நேர விரயம்.
தமிழ்நாட்டு இளைஞா்களின் திறன்களை ஜப்பான், ஜொ்மன் போன்ற நாட்டினா் உணா்ந்திருக்கிறாா்கள். அவா்களுக்கு எங்கள் மொழியைக் கற்றுத் தந்து அனுப்புங்கள் என்றும் கேட்கிறாா்கள். எனவே, நான் முதல்வன் திட்டத்தில் தொழில்திறன் பயிற்சி மட்டுமல்லாது, ஜப்பானிய, ஜொ்மானிய மொழிகளையும் கற்றுத் தருகிறோம் என்றாா் ராஜா.