'இந்த பொண்ணுங்க அவ்வளவு உழைச்சிருக்காங்க!' - உருகும் இந்திய அணியின் பயிற்சியாளர்...
"நடிகர் அஜித்குமார் சொன்ன கருத்தை நான் வரவேற்கிறேன்..!" - சொல்கிறார் துரை வைகோ
பள்ளி விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்த மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, "அதிமுக விவகாரம் குறித்து நான் பேசுவது ஆரோக்கியமாக இருக்காது, தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாக உள்ளது என்று அண்ணாமலை சொல்வது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் இடைநிற்றல் இல்லாமல் இருப்பது தமிழ்நாட்டில்தான்.

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு, பீகார் மட்டுமல்ல ஒரிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பின்தங்கிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள், உழைக்கிறார்கள், இங்கு யாரையும் துன்புறுத்துவது கிடையாது. பீகாரில் வேலை கிடைக்காததால்தான் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். நம்மால் அவர்கள் பயனடைகிறார்கள். தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது தவறானது.
ஜாதி, மத அரசியலைக் கடந்து நாட்டின் பிரதமர் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்கம் திமுக. இரு மாநிலங்களுக்கு இடையே வன்மம் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பிரதமர் இதைச் சொல்லி இருக்கக்கூடாது.
எஸ்.ஐ.ஆரைப் பொறுத்தவரை பீகாரில் கொண்டு வந்தபோது அதில் நிறைய குழப்பம் ஏற்பட்டது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு பல கேள்விகளைக் கேட்டுள்ளது. அதற்கான முழுமையான பதில் இன்னும் வரவில்லை. தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் கொண்டு வரும் நிலையில், வடகிழக்குப் பருவமழை, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற பண்டிகை விடுமுறை காலம் வர உள்ளது. வீடு பூட்டியுள்ள நேரத்தில் ஆள் இல்லை என்று வாக்குரிமை பறிக்கப்பட வாய்ப்புள்ளது. எஸ்ஐஆரால் பீகாரில் வாக்குரிமை இருந்தும் வாக்கு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தகுதியானவர்கள் வாக்குரிமை இழந்திருக்கிறார்கள்.

கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித்குமார் கூறியதைத்தான் முன்பே நான் கூறினேன், மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். கர்ப்பிணிகள், வயதானவர்கள் வரக்கூடாது என்று சொல்லப்பட்டதை மீறி வந்திருக்கிறார்கள். பெங்களூரில் ஐபிஎல் வெற்றி விழாவில் 10 பேர் இறந்தார்கள், உத்தரப் பிரதேசம் கும்ப விழாவில் 100 பேர் இறந்தார்கள். பல்வேறு நிகழ்வுகளில் கூட்ட நெரிசலால் மக்கள் இறக்கிறார்கள். மக்களிடம் விழிப்புணர்வு இருக்க வேண்டும். அஜித் அதைத்தான் சொல்லியிருக்கிறார். அஜித்குமார் சொன்ன கருத்தை நான் வரவேற்கிறேன்." என்றார்
















