சென்னை கடற்கரைச் சாலை - ஓ.எம்.ஆரில் நாளை பொது போக்குவரத்து நிறுத்தம்
`நடிகர் ராகவா லாரன்ஸின் உதவியாளர் நான்' - பண மோசடிசெய்த இளைஞர் சிக்கியது எப்படி?
சென்னை எழும்பூர், பெருமாள்ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் வீர ராகவன் (28). இவர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். நான் வறுமையில் இருந்ததால் என் மகள் படிப்பு செலவுக்கு உதவுமாறு இன்ஸ்டாகிராமில பதிவு போட்டிருந்தேன். இந்தநிலையில் கடந்த 4-ம் தேதி சதீஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். அவர், தன்னை நடிகர் ராகவா லாரன்ஸ் உதவியாளர் என்று கூறினார். பின்னர் சதீஷ், என்னிடம் குழந்தைக்கு கல்வி உதவி செய்வதாகவும் அவளின் படிப்புக்கான முழு செலவையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், உங்கள் மகளின் கல்வி செலவை ஏற்றுக் கொள்வதற்கு நீங்கள் நான் சொல்லும் போன் நம்பருக்கு 8,675 ரூபாய் அனுப்ப வேண்டும் என்று கூறினார்.
உடனே நான் எதற்காக பணம் அனுப்ப வேண்டும் என்று கேட்டதற்கு எங்களின் தொண்டு நிறுவனத்தில் முதலில் நீங்கள் உறுப்பினராக வேண்டும் என்று பதிலளித்தார். அதனால் நானும் சதீஷ் கேட்ட பணத்தை அனுப்பி வைத்தேன். அதன் பிறகு எனக்கு மீண்டும் போன் செய்த சதீஷ், வங்கிக் கணக்கை தொடங்க 2875 ரூபாய் அனுப்பும்படி கூறினார். அதையும் உண்மையென நம்பி அந்தப் பணத்தை அனுப்பி வைத்தேன். இதையடுத்து என்னை போனில் தொடர்பு கொண்ட சதீஷ், உங்களின் வங்கிக் கணக்கு ஓப்பனாகிவிட்டது. நீங்கள் 50,000 ரூபாய் அனுப்பி வைத்தால் உங்கள் மகளின் முழு படிப்பு செலவையும் எங்களின் தொண்டு நிறுவனம் பார்த்துக் கொள்ளும் என்ற கூறினார். அதனால் நானும் 50,000 ரூபாயை அனுப்பி வைத்தேன். பணம் வந்து விட்டது. ஆனால் 50,000 ரூபாய்க்கான ஸ்கீம் முடிந்து விட்டது. அதனால் நீங்கள் மேலும் 30,000 ரூபாய் அனுப்பினால் 80,000 ரூபாய் ஸ்கீமில் சேர்த்து கொள்கிறேன் என்று கூறினார். அதைக் கேட்டவுடன் நான் சுதாரித்துக் கொண்டு எனக்கு எந்த ஸ்கீமும் தேவையில்லை. எனவே நான் அனுப்பிய 61,550 ரூபாயை திரும்ப எனக்கு அனுப்பி வையுங்கள் என்று கூறினேன்.
உடனே சதீஷ் என்பவர், உனக்கு பணத்தை திரும்ப அனுப்ப முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டார். நான் இந்தப் பணத்தை என் மனைவியின் தாலி செயினை அடமானம் வைத்து அனுப்பி வைத்தேன். எனவே என்னை ஏமாற்றிய சதீஷைப் பிடித்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு என்னுடைய பணத்தையும் மீட்டு தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வெற்றிச் செல்வன், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பிறகு பண மோசடியில் ஈடுபட்ட தினேஷ்குமார் என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து எழும்பூர் போலீஸார் கூறுகையில், ``கல்வி உதவி தொகை வழங்குவதாக ஆசைவார்த்தைகளைக் கூறி பணத்தை ஏமாற்றியவரின் உண்மையான பெயர் தினேஷ்குமார். இவர் தன்னுடைய பெயரை சதீஷ் என்று கூறியுள்ளார். பணத்தை இழந்த வீர ராகவன், ஒரு செல்போன் நம்பரை மட்டுமே எங்களிடம் கொடுத்தார். அதனால் அந்த செல்போன் நம்பர் யாருடைய பெயரில் உள்ளது எனக் கண்டறிய திருவல்லிக்கேணி சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியை நாடினோம். அவர்கள் அந்த செல்போன் சிக்னல் வேலூரிலிருப்பதாக கூறினர். இதையடுத்து வேலூருக்குச் சென்று தினேஷ்குமார் என்பவரைப் பிடித்தோம். அப்போதுதான் அவரின் மோசடி திட்டம் வெளியில் தெரியவந்தது.
கைதுசெய்யப்பட்ட தினேஷ்குமாரிடமிருந்து 60,000 ரூபாயை பறிமுதல் செய்துள்ளோம். அவரிடம் விசாரித்தபோது பத்தாம் வகுப்பு வரைப் படித்த இவர், மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் மீது ஏற்கெனவே வேலூர் மாவட்டத்தில் இதே ஸ்டைலில் பணத்தை மோசடி செய்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் கைதாகி சிறைக்கும் சென்றிருக்கிறார். ஜாமீனில் வெளியில் வந்த தினேஷ்குமார், ஆன்லைனில் உதவிகளைக் கேட்பவர்களைக் குறி வைத்து மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. தொடர்ந்து தினேஷ்குமாரின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம். இவருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றனர்.