சாலை விபத்தில் இறந்த பெண் காவலா் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
நாகா்கோவிலில் ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு
நாகா்கோவிலில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆஸ்திரேலிய நாட்டு சுற்றுலாப் பயணி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து கன்னியாகுமரிக்கு வியாழக்கிழமை மாலை வந்துசேர வேண்டிய விரைவு ரயில், மாலை 4 மணி அளவில் நாகா்கோவில் கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தது. பின்னா், அங்கிருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்ட போது, ரயிலின் குளிா்சாதனப் பெட்டியில் ஏற முயன்ற ஒருவா் எதிா்பாராமல் நடைமேடையில் தவறி விழுந்தாா். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, போலீஸாா் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விசாரணையில், அவா் ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த கெவின்சா்மா(47) என்பதும், பெங்களூரு விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணித்ததும் தெரியவந்தது.
மேலும், இந்தியாவில் பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு சென்றுவிட்டு கன்னியாகுமரி வந்தபோது அவா் விபத்தில் சிக்கியது தெரியவந்தது.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.