செய்திகள் :

``நான் செஞ்சது சின்ன விசயம் தான்; வாழ்நாள் உள்ளவரை...'' - தாய்க்கு சிலை வடித்த இளைஞர் உருக்கம்!

post image

`நலமோடு இருக்கும்போதே நன்றிக்கடன் செஞ்சுடணும்!'

நம்மை வாழ்க்கையில் உயரத்திற்கு ஏற்றிவிடும் ஏணியாக இருக்கும் பெற்றோரை, கடைசிக்காலத்தில் அவர்களை கறிவேப்பிலையாக நம்மில் சிலர் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகிறோம். அதேபோல், உயிரோடு இருக்கும்போது அவர்களுக்கு ஒருவாய் கஞ்சி ஊற்ற மறுக்கும் பிள்ளைகள், அவர்கள் மறைந்தபிறகு அவர்களது இறுதி ஊர்வலத்தை விமர்சையாக நடத்துவதையும் பார்த்திருக்கிறோம்.

சிலை

ஆனால், நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கஷ்ட ஜீவனிலும் தன்னைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தெடுத்து ஆளாக்கிய தனது தாய்க்கு நன்றிக்கடனாக, அவர் நலமுடன் இருக்கும்போதே, இடம் வாங்கி, தாய்க்கு சிலை அமைத்து, அந்த இடத்தில் கோயில் அமைத்து, தனது தாயை நெகிழ வைத்திருக்கிறார்.

`எந்த வேலை கெடச்சாலும் செய்து எங்களை காப்பாற்றினார்'

நாமக்கல் மாவட்டம், கூலிப்பட்டியைச் சேர்ந்த பிரபுதான் தனது தாய் மணிக்கு சிலை செய்து, கோயில் கட்டிய இளைஞர். அந்தப் பகுதியில் அவர் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். தாய்க்கு கோயில் கட்டியது பற்றி பிரபுவிடம் பேசினோம்.

“நான் பிறந்தபோதும், சிறு பையனா இருந்தபோதும், ஒருவேளை சோத்துக்கே அல்லாடுற அளவுக்கு வறுமையான சூழல். என்னோட அப்பா வாசுவும், என்னோட தாய் மணியும் கூலி வேலைக்குப் போய் என்னையும், என்னோட தங்கை ஜீவாவையும் வளர்த்து வந்தாங்க. இந்நிலையில், கூலித் தொழில் செய்து வந்த என்னோட அப்பா வாசு, கடந்த 2003 - ம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக இறந்து விட்டார். அப்போ எனக்கு 10 வயசிருக்கும். என்னோட தங்கை ஜீவாவுக்கு அப்போ 8 வயசுதான். மொத்தக் குடும்பமும் இடி விழுந்த முட்டை ஓடாக நொறுங்கிப்போனது.

வெல்டிங் பட்டறையில் பிரபு

பொருளாதாரத்துக்கு வழியில்லாம குடும்பம் நிர்கதியாக நின்னுச்சு. ஆனா, எங்கம்மா எங்களை எப்பாடுபட்டாவது வேலை செஞ்சு முன்னுக்கு கொண்டு வரணும்னு முடிவு பண்ணினாங்க. எங்களுக்காக வேற எந்த ஆசாபாசத்துக்கும் இடம்கொடுக்காம வைராக்கியமாக வேலை செஞ்சு, எங்களுக்கு கஞ்சி ஊத்திக் காப்பாத்தினாங்க. எங்களை வளர்க்க வீட்டு வேலை, கட்டட வேலை, விவசாய கூலி வேலை என எந்த வேலை கெடச்சாலும் செய்து காப்பாற்றினார். தான் பலவேளை பட்டினிக் கிடந்து என்னையும், என் தங்கச்சிக்கும் சோறு போட்டு வளர்த்தார்.

`அதுக்குப் பிறகு அம்மாவுக்கு சிரமம் கொடுக்க கூடாது'

பல்வேறு வகையிலும் துன்பத்தை அனுபவித்த என் தாய், என்னை 10 - ஆம் வகுப்பு வரை படிக்க வைத்தார். அதன்பிறகு, 'நான் என் தலையை வித்தாவது உன்னை மேல் படிப்பு படிக்க வைக்கிறேன். கல்லூரி படிப்பு வரை படிச்சு, குடும்பத்தை கரை சேரு சாமி..' என்று சொன்னார். ஆனால், அதுக்குப் பிறகு அம்மாவுக்கு சிரமம் கொடுக்க கூடாது, அவருக்கு உதவியா இருக்கலாம்னு நினைச்சு, இங்கிருந்த ஒரு வெல்டிங் பட்டறையில வேலைக்குச் சேர்ந்தேன். அங்க தொழில் பழகுனதுக்கு அப்புறமா கூலிப்பட்டறையிலேயே சொந்தமா வெல்டிங் பட்டறை வெச்சு கடினமா உழைச்சேன். அதன்பிறகு, ஓரளவு பொருளாதார நிலைமை சீரானுச்சு. என் தங்கைக்கு ஜாம் ஜாம்னு திருமணம் செய்து வெச்சேன். எனக்கும் திருமணமாகி பிறந்துச்சு.

சிலை

ஆனால், அப்பா இறந்தபிறகு, குடும்பமே மூழ்க இருந்துச்சு. ஆனா, குடும்பத்தை காப்பாத்த ஒத்தை மனுஷியாக கிடைச்ச வேலைகளை செஞ்சு, எங்களை வளர்க்க கஷ்டப்பட்ட அம்மாவை கடைசி காலம் வரை எந்த மனக்குறையும் இல்லாம சந்தோஷமாக வைத்துக்கொள்ள நினைச்சேன். அதேமாதிரி, இன்னைய வரைக்கும் அவரை ராணி மாதிரி மகிழ்ச்சியா வைத்திருக்கிறேன். இதற்கிடையில், அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பது மட்டும் போதாது, அவருக்கும் அதற்கு மேல் ஏதாவது நன்றிக்கடன் பண்ணனும்னு நினைச்சேன். அதையும், அவர் உயிரோடு நலமாக என்னோடு இருக்கும் சமயத்திலேயே செய்ய வேண்டும் என்று முடிவு பண்ணினேன்.

`இது என்னோட கடமை... மறுக்காதே'

அதோடு, அவரை என்றும் நினைவில் வைக்க வேண்டும் என்பதற்காக, கூலிப்பட்டி சக்திநகர் நான்கு சாலை சந்திப்பு அருகே 1,500 சதுர அடி இடத்தை விலைக்கு வாங்கி, அதில் கோயில் கட்ட முடிவெடுத்தேன். அதன்படி, கடந்த வருடம் அந்த இடத்தை விலைக்கு வாங்கினேன். அங்கே கோயில் போல் கட்டினேன். எனது அம்மாவின் 80 கிலோ எடையுள்ள, 3 அடி உயர மார்பிள் திருவுருவச் சிலையை ராஜஸ்தான் மாநிலத்தில் செய்து கொண்டு வந்து, அதில் வைத்து பிரதிஷ்டை செஞ்சேன். கடைசி நேரத்தில் சிலையை அவர் கையால் திறக்கச் சொல்லும்போதுதான், இந்த விசயமே அவருக்கு தெரியும். சஸ்பென்ஸாக வைத்திருந்தேன். ஆனால் என்னோட அம்மா, 'இது ஏன்டா வேண்டாத வேலை. இது வீண் செலவுதானே?.

சிலை

இந்தப் பணத்தை வைத்து, உன் பிள்ளையை நல்லா படிக்க வைக்கலாம். நகை, நட்டு வாங்கலாம். ஏன் இப்படி காசை கரியாக்குறே?' என்று அம்மா அங்கலாய்ப்பா கேட்டாங்க. ஆனா, அவங்க சொல்றதை காதில் வாங்கிக்காம, 'இது என்னோட கடமை. அதை மறுக்காதே' என்று சமாதானம் செஞ்சதோடு, கோயிலை திறக்க வைத்தேன். காலி இடம் வாங்கியது, சிலை செய்ய, கோயில் மாதிரி அமைக்க, விழா ஏற்பாடு என்று பல லட்சம் வரை செலவானுச்சு.

`அவர் எங்க குலதெய்வம்...'

உலக பெற்றோர் தினத்தன்று கோயிலை என் தாயை வைத்து திறந்தேன். இப்போ, தினமும் வணங்கிவிட்டுதான், வேலையைப் பார்க்க ஆரம்பிக்கிறேன். சிலர் இதை அதிகப்பிரசங்கித்தனமாக கூட நினைக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவர் எங்க குலதெய்வம்தான். அப்பா இறந்தபிறகு, 'இனி இந்த குடும்பம் அவ்ளோதான். இருக்குற தடம் தெரியாம போக போவுது'னு பலரும் அம்மா காதுபட சொன்னாங்க.

தாய் மற்றும் சிலையோடு பிரபு

ஆனால், அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, இரும்புமனுஷியாக மாறி, எங்க குடும்பம் நல்லபடியாக வர பாடுப்பட்டார். அதற்காக, அவருக்கு நான் செஞ்சது சின்ன விசயம் தான். அதேபோல், ஒவ்வொருவரும் நம்மை வளர்த்து ஆளாக்கிய தாய், தந்தையரை என்றும் மறவாது இருக்க வேண்டும். நம்ம வாழ்நாள் உள்ளவரை அவர்களை நினைக்க வேண்டும் என்பதற்கான முயற்சியே இந்த சிலை” என்றார்.

அப்போது அவரை இடைமறித்து பேசிய அவரது தாய் மணி,

"இப்படியொரு மகனை பெற்றெடுத்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது கணவர் இறந்த பிறகு 20 ஆண்டுகள் கடுமையான போராட்டங்களை சந்தித்து அவர்களை வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளேன். இந்த சிலை திறக்கப்படுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

பிரபுவின் தாய் மணி

சிலையை திறப்பதற்கு முன்பு 6 மாதங்களுக்கு முன்பாகவே சிலையை தயாரித்து வந்து, யாருக்கும் தெரியாமல் அவனது நண்பர் வீட்டில் வைத்து பாதுகாத்து, கோயிலை அமைத்தான். கடைசியில், திறப்பு விழா நாளில்தான் என் சிலையை, என் மூலமாகவே திறந்து வைத்து பெருமைப்படுத்தியுள்ளான். அவன் ஆயுள் முழுவதும் நலமுடன் வாழ வேண்டும். வேறென்ன சொல்ல?!” என்றார் நெக்குருகிபோய்!.

Warren Buffett: தொடரும் நன்கொடை... இந்த முறை 1.2 பில்லியன் டாலரை அள்ளிக்கொடுத்த வாரன் பஃபெட்!

அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஹாத்வே நிறுவனத் தலைவரும், உலகின் பணக்காரர்களில் ஒருவருமான வாரன் பஃபட் தன் சொத்துகளில் 1.2 பில்லியன் டாலர் சொத்துகளை தன் அறக்கட்டளைக்கு வழங்கியிருக்கிறார். வாழ்நாளுக்குள்ளு... மேலும் பார்க்க

'கடனை கட்டு!' நெருக்கிய குழுத் தலைவி; ரூ.90,000 கடனை தள்ளுபடி செய்த ஆட்சியர்-நெகிழ்ந்த தொழிலாளி

திருச்சி மாநகரம், பாலக்கரை தாமோதரன் எடத்தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது: 42). கூலித் தொழிலாளியான இவர், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வள்ளி. இவர்களு... மேலும் பார்க்க

''விலா எலும்பு உடைஞ்சும் எங்கம்மா கருவை கலைக்கல'' - ஒரு கலெக்டரின் கதை

''எங்கம்மா அப்போ அஞ்சு மாச கர்ப்பிணியா இருந்தாங்க. ஒருநாள் அங்கன்வாடிக்காக தண்ணி எடுத்துட்டு குடத்தை இடுப்புல வெச்சுக்கிட்டு நடந்து வந்திருக்காங்க.அந்த நேரத்துல யாரோ ஒருத்தர் டூ வீலரை அம்மா மேல மோதியி... மேலும் பார்க்க

`இனிமே பயப்பட மாட்டேன்கா..!’ - விபத்தில் கால்களை இழந்த விஜய்; கடை வைத்து கொடுத்த விகடன் வாசகர்கள்

ரயில் விபத்தில் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்த வாணியம்பாடியைச் சேர்ந்த விஜய்யையும், 'கால் இல்லைன்னா என்ன; தாலிக்கட்ட கை தானே வேணும்' என்று, விஜய்யை மருத்துவமனையிலேயே திருமணம் செய்துகொண்ட ஷில்பாவைய... மேலும் பார்க்க

``ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவு; மறக்க முடியாத மகிழ்ச்சி..'' - நெகிழ வைத்த பள்ளி மாணவர்கள்..!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் உள்ளது மாக்தலீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் இப்பள்ளி மாணவர்கள் நகரில் உள்ள ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவுகளை வழங்... மேலும் பார்க்க