`பால் பவுடருக்கு பதில் க்யூப்' - ஜப்பானில் அறிமுகமான 'பேபி ஃபார்முலா க்யூப்ஸ்' -...
நாய்கள் பேய்களைப் பார்க்கிறதா? நள்ளிரவில் அவை குறைப்பதன் மர்மம் என்ன?
வீட்டில் வளர்க்கும் நாய்கள் சில நேரங்களில் யாரும் இல்லாத இடத்தைப் பார்த்து தொடர்ந்து குறைப்பதைப் பார்த்திருப்போம். "நாய்களுக்குப் பேய்கள் தெரியும், அவை அதனை உணரும்" என்று காலம் காலமாக வீட்டில் இருப்பவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் உண்மையில் நாய்களால் ஆவிகளைப் பார்க்க முடியுமா? இதுகுறித்து ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.
லண்டன் ரிப்பன் கல்லூரியின் பேராசிரியர் மார்க் ஈடன் இதுகுறித்து கூறுகையில், "சமீபத்தில் தந்தையை இழந்த ஒருவர், தன் நாய் தொடர்ந்து படிக்கட்டுகளைப் பார்த்துக் குறைப்பதாகக் கூறினார். அவர் ஏற்கெனவே பேய்களின்மீது நம்பிக்கை கொண்டவர் என்பதால், தன் நாய் தன் தந்தையின் ஆவியை உணர்வதாக அவர் நம்புகிறார் என்று கூறியிருக்கிறார்.

அறிவியல் சொல்வதென்ன?
விஞ்ஞானிகள் "நாய்கள் பேயைப் பார்க்கவில்லை, மனிதர்களால் உணர முடியாத சத்தங்களையும், வாசனைகளையும் அவை உணர்கின்றன" என்று கூறுகின்றனர்.
லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் கிறிஸ்டோபர் பிரெஞ்ச் கூறுகையில் "நாய்களுக்கு மனிதர்களைவிட சிறந்த நுகரும் திறனும், கேட்கும் திறனும் உண்டு. எனவே மனிதர்களால் கண்டறிய முடியாத இயற்கையான அசைவுகளைக் கண்டு அவை எதிர்வினையாற்றுகின்றனவே தவிர, இது அமானுஷ்யம் அல்ல" என்று கூறியிருக்கிறார்.
மனிதர்களுக்கு மூக்கில் சுமார் 5 மில்லியன் நுகர்வு செல்கள் மட்டுமே உள்ளன. ஆனால், நாய்களுக்கு சுமார் 220 மில்லியன் நுகர்வு செல்கள் உள்ளன. இது மனிதனை விடப் பல மடங்கு அதிகமாம்.
1950-களில் டியூக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், மிகக் குறைந்த அளவு பூண்டு எண்ணெயைக்கூட நாய்களால் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடிந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் சமீபத்திய ஆய்வுகளில், புற்றுநோய் பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை வாசனை மூலமே நாய்கள் கண்டுபிடிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏன், மனிதர்களின் மன அழுத்தத்தைக்கூட நாய்களால் முகர்ந்து உணர முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இதிலிருந்து என்ன தெரிகிறது, நாய்கள் ஒரு வெற்று இடத்தைப் பார்த்து குரைத்தால், அங்கே பேய் இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டாத ஏதோ ஒரு வாசனையோ அல்லது சத்தமோ அங்கே இருக்கிறது என்பதே அறிவியலில் பதிலாக உள்ளது.






















