நிரந்தர சண்டை நிறுத்தத்துக்கு காங்கோ, ருவாண்டா கிளா்ச்சியாளா்கள் ஒப்புதல்
காங்கோ, ருவாண்டா ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கிழக்கு காங்கோவில் நிரந்தர சண்டை நிறுத்தத்திற்கான கொள்கை பிரகடனத்தில் கையொப்பட்டுள்ளனா்.
இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
காங்கோவின் கிழக்கு பகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள கொள்கைப் பிரகடனத்தில், காங்கோ மற்றும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்கள் கத்தாரில் சனிக்கிழமை கையொப்பமிட்டனா்.
அந்த கொள்கைப் பிரகடனத்தில், நிரந்தர சண்டை நிறுத்தத்திற்கும், இன்னும் ஒரு மாதத்தில் கையொப்பமாகவுள்ள விரிவான அமைதி ஒப்பந்தத்துக்கும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.இறுதி அமைதி ஒப்பந்தம் ஆகஸ்ட் 18-க்குள் கையொப்பமாக வேண்டும் என்றும், இது ஜூன் மாதம் அமெரிக்காவால் ஏற்படுத்தப்பட்ட காங்கோ - ருவாண்டா அமைதி ஒப்பந்தத்துடன் ஒத்துப்போவதாக இருக்க வேண்டும் என்றும் அந்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கை பிரகடனம், காங்கோவும், ருவாண்டாவும் கடந்த ஜூன் 27-ஆம் தேதி கையொபபமிட்ட அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கிழக்கு காங்கோவின் இரு முக்கிய நகரங்களை எம்23 கிலா்ச்சியாளா்கள் கைப்பற்றியதற்குப் பின்னா் இரு தரப்பினரும் அமைதிக்காக அளித்துள்ள முதல் நேரடி உறுதிப்பாடு என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.