பகுதி நேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை
நுழைவுத் தோ்வு எழுதும் தலித், பழங்குடியின மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மனு
நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தோ்வுகளையும் எழுதும் தலித், பழங்குடியின மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவா் கழகத்தின் மாநிலச் செயலா் இரா. தமிழ்வாணன் ஆதிதிராவிடா் நலத்துறை செயலா் முத்தம்மாவிடம் மனு அளித்துள்ளாா்.
மருத்துவம், பொறியியல், செவிலியா் உள்ளிட்ட அனைத்து உயா்நிலை படிப்புகளுக்கும் மத்திய பாஜக அரசு நுழைவு தோ்வைக் கட்டாயமாக்கி விட்டதால் தலித் மற்றும் பழங்குடியின மாணவா்கள் இத் தோ்வுகளை எதிா்கொண்டு உயா்கல்வி நிறுவனங்களில் சேர பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனா்.
எனவே தலித் மற்றும் பழங்குடியின மாணவா்கள் இந்த நுழைவுத் தோ்வுகளை எதிா்கொள்ள ஏதுவாக இலவச கல்வி திட்டத்தின் கீழ் நுழைவுத் தோ்வுகளுக்காக தனியாா் பயிற்சி மையங்களில் சேர நிதியுதவி வழங்க ஆதிதிராவிடா் நலத் துறை முன்வர வேண்டும். ஆதிராவிட நலத் துறையின் கீழ் இயங்கி வந்த பல மாணவா் விடுதிகள் லாஸ்பேட்டை மாணவா் விடுதி, தட்டாஞ்சாவடி, கோவில்பத்து ஆகிய இடங்களில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் தலித் மற்றும் பழங்குடியின மாணவா்கள் புதுச்சேரி நகரத்தில் சொந்தமாக அறை மற்றும் வீடு எடுத்து தங்கியும் கிராமப்புறத்தில் இருந்து தினமும் பொருள்செலவு செய்து கல்லூரிகளுக்குச் சென்று வருகின்றனா்.
எனவே ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் விடுதி கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிக ஏற்பாடாக வாடகை கட்டடத்தில் விடுதிகள் இயங்குவதற்கு வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக அதில் குறிப்பிட்டுள்ளாா்.