செய்திகள் :

நெல்லை: 17 வயது சிறுவனை வீடு புகுந்து வெட்டிய கும்பல்! - பதற்றத்தில் மக்கள்; உறவினர்கள் சாலை மறியல்

post image

நெல்லையின் புறநகர்ப் பகுதியையொட்டி மேலப்பாட்டம் கிராமம் உள்ளது. அங்குள்ள சின்னதுரை-சுகந்தி தம்பதியின் 17 வயது மகன், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் நேற்று (4-ம் தேதி) மாலையில் வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரிலிருந்து வேகமாக வந்த கார் அவர் மீது மோதுவது போல் வந்துள்ளது. அதைத் தட்டிக் கேட்டதால் வெட்டிய கும்பல் மீது கிராம மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.

சிறுவனின் வீடு

வேகமாக காரில் வந்தவர்களை நோக்கி கைநீட்டிய சிறுவன், ‘இந்த குறுகிய சாலையில் மெதுவாகச் செல்லக் .கூடாதா’ எனக் கேட்டுள்ளார். அதனால் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கியவர்கள், சிறுவனை அடிக்கப் பாய்ந்து தகராறு செய்திருக்கிறார்கள். அப்போது அந்த வழியாக வந்தவர்கள், காரில் இருந்த கும்பலைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த சிறுவன் வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சரமாரியாக வெட்டியுள்ளனர். சிறுவனது கழுத்து, முதுகு, கால் ஆகிய இடங்களில் பலத்த வெட்டு விழுந்துள்ளது. அத்துடன், அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் சிறுவனின் தலையில் அடித்துள்ளார்

வீட்டை சூறையாடிய குடிகார கும்பல்

பலத்த காயத்துடன் ரத்தம் சொட்டிய நிலையில் சிறுவனின் கதறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் ஓடிவந்துள்ளனர். அதற்குள் அந்தக் கும்பல் தப்பிச் சென்று விட்டது. படுகாயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சை பெறும் சிறுவன்

சிறுவனின் தாயார் சுகந்தி அளித்த புகாரின் அடிப்படையில் பாளையங்கோட்டை தாலுகா காவல்துறையினர் 10 பேர் கொண்ட கும்பல் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், கொலை முயற்சி, அவதூறாகப் பேசுதல், சிறார் நீதிச் சட்டம் உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிராமத்தில் போலீஸ் குவிப்பு

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட நான்கு பேரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் ,திருமலைக்கொழுந்துபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார், லட்சுமணன்,தங்க இசக்கி ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பின்னர், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களைக் குறிவைத்து ஒரு கும்பல் இது போன்ற தாக்குதலில் ஈடுபடுவதாக மேலப்பாட்டம் கிராமத்தினரும் பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர்களும் வேதனை தெரிவித்தனர். குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்யக் கோரியும் இனிமேல் இது போன்ற சம்பவம் நடக்காத வகையில், போலீஸார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களுடன் காவல்துறை பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டு இருப்பதோடு, விரைவில் வெட்டிய கும்பல் கைது செய்யப்படுவார்கள் என எஸ்.பி-யான சிலம்பரசன் உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

திருச்சி: காவிரி ஆற்றங்கரையில் இரண்டாவது முறையாக கிடைத்த ராக்கெட் லாஞ்சர்! - அதிர்ச்சியில் மக்கள்

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் அருகே காவிரி ஆற்றின் கரையில் கடந்த மாதம் 30 - ஆம் தேதி ராக்கெட் லாஞ்சர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதுகுறித்து போலீஸார் விசாரணை செய்ததில், அது கொரிய போரின் போது அமெரிக்க ... மேலும் பார்க்க

வேலூர்: முன்னாள் ராணுவ வீரர் மீதான போக்சோ வழக்கு; 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள ஒலக்காசி ரோடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (61).முன்னாள் ராணுவ வீரரான சேகர், கடந்த 2022ஆம் ஆண்டு 16 வயதான பள்ளி மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ... மேலும் பார்க்க

பெண் காவலர் பாலியல் சீண்டல் வழக்கு: ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகனுக்கு பிடி வாரண்ட் - நீதிமன்றம் அதிரடி!

இன்று சைதாப்பேட்டை 11வது மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றத்தில் முன்னாள் ஐ.ஜி முருகனுக்கு எதிராக பெண் எஸ்.பி தொடர்ந்த பாலியல் சீண்டல் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஆஜராகாத முருகனுக்கு நீதிபதி ... மேலும் பார்க்க

சேலம்: பள்ளி வகுப்பறையில் மாணவரை கால் பிடித்து விடச் சொன்ன ஆசிரியர்; பரவிய வீடியோ, பாய்ந்த நடவடிக்கை

சேலம் மாவட்டம், தலைவாசல் தாலூகாவிற்கு உட்பட்ட கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கிழக்கு ராஜாபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகு... மேலும் பார்க்க

இறந்ததாக அறிவித்த 3 மருத்துவர்கள்; தகனம் செய்யும்போது உயிர்த்தெழுந்த இளைஞர் - என்ன நடந்தது?

ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு மாவட்டத்தில் வசித்தவர் ரோஹிதாஷ் குமார் (25). வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியான இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. உடனே அவரின் உறவினர்கள், அ... மேலும் பார்க்க

நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு; போலீஸ் விசாரணை!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சீதா. இவர் விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் ஒன்ற... மேலும் பார்க்க