நேபாளம் தப்ப முயற்சி; மும்பையில் பாபா சித்திக்கை சுட்டுக் கொன்ற முக்கிய குற்றவாளி உ.பி-யில் கைது!
மும்பையில் கடந்த மாதம் 12-ம் தேதி தேசியவாத காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் பாந்த்ராவில் உள்ள அவரது மகன் அலுவலகத்திற்கு எதிரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இப்படுகொலையில் நேரடியாக ஈடுபட்டவர்களில் இரண்டு பேர் உடனே கைது செய்யப்பட்டனர். ஆனால் துப்பாக்கியால் சுட்ட சிவ்குமார் என்பவர் கூட்டத்தில் தப்பித்துவிட்டார். அவரை மும்பை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர். அவர் உத்தரப்பிரதேச மாநிலம், பஹ்ரைச் மாவட்டத்தில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். சிவ்குமார்தான் மும்பையில் பாபா சித்திக்கை துருக்கியில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் 6 முறை சுட்டதாக பஹ்ரைச் மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரமேஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ''ஸ்நேப்சாட் மூலம் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோயுடன் சிவ்குமார் தொடர்பில் இருந்துள்ளார். அன்மோல்தான் சிவ்குமாரிடம் ரூ.10 லட்சம் தருவதாக கூறி கொலை செய்யும்படி தெரிவித்துள்ளார். கொலைக்கு தேவையான ஆயுதங்கள், சிம்கார்டு, மொபைல் போன் போன்றவற்றை புனேயை சேர்ந்த சுபம் கொடுத்துள்ளார். சிவ்குமாரும், அவர் கூட்டாளிகளும் பல நாட்கள் பாபா சித்திக்கை கண்காணித்து இப்படுகொலையை செய்துள்ளனர். கொலை செய்துவிட்டு சிவ்குமார் புனே சென்றுள்ளார். அங்கிருந்து ஜான்சி மற்றும் லக்னோ சென்று இறுதியாக பஹ்ரைச் சென்றுள்ளார்.
கொலை செய்துவிட்டு தப்பிச்செல்லும்போது கூட இக்கொலையில் தொடர்புடையவர்களுடன் சிவ்குமார் தொடர்ந்து பேசிவந்திருக்கிறார்'' என்றார்.
மும்பை போலீஸார் சிவ்குமார் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவர் பஹ்ரைச் என்ற இடத்தில் பதுங்கி இருப்பதை உறுதி செய்து கொண்ட பிறகு உள்ளூர் போலீஸாரை தொடர்பு கொண்டு அவரைக் கைதுசெய்ய உதவும்படி கேட்டுக்கொண்டனர். உடனே உத்தரப்பிரதேச போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து நேபாளத்திற்கு தப்பிச்செல்ல திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. அதற்குள் கைது செய்துவிட்டனர். இக்கொலை தொடர்பாகபஹ்ரைச் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது வரை மொத்தம் 23 பேர் இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். முதன் முதலில் துப்பாக்கிச்சூடு நடந்த இடந்த இடத்தில் இருந்து தர்மராஜ் மற்றும் சுனைல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பிடிபட்டது எப்படி?
சிவ்குமார் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து மும்பையை சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ''சிவ்குமார் தப்பிச் சென்றதையடுத்து அவரைக் கைதுசெய்ய 5 அதிகாரிகள் உட்பட 21 பேர் கொண்ட தனிப்படையை அமைத்தோம். அவர் பஹ்ரைச் தான் சென்று இருக்கவேண்டும் என்று உறுதியான உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தன. 25 நாட்கள் தீவிரமாக கண்காணித்தோம். பஹ்ரைச் பகுதியில் சிவ்குமாருக்கு வேண்டப்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 35 பேரை தீவிரமாக கண்காணித்து வந்தோம். அவ்வாறு கண்காணித்ததில் சிவ்குமார் நண்பர்கள் நான்கு பேர் சிக்கினர். அவர்கள் இரண்டு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்த போது சிவ்குமார் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரிய வந்தது.
உடனே சம்பவ இடத்திற்கு சென்று சிவ்குமாரை மடக்கி பிடித்து கைதுசெய்தோம்'' என்றார்.
சிவ்குமாருடன் அவர் கூட்டாளிகள் நான்கு பேரும் பிடிபட்டுள்ளனர். சிவ்குமார் இன்று மும்பைக்கு அழைத்து வரப்பட்டு மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். சிவ்குமாரை மற்ற கைதிகளுடன் வைத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அதிகரித்துவிட்டதால் வன்முறை ஏற்படும் அபாயம் இருப்பதால் அவர்களை மும்பை புறநகரில் இருக்கும் தலோஜா சிறைக்கு மாற்ற மும்பை போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.