பகத் சிங் சிலை சேதம்: ஆம் ஆத்மி மீது பாஜக எம்எல்ஏ சாடல்
நமது நிருபா்
மால்வியா நகா் பூங்காவில் ஷஹீத் பகத் சிங்கின் சேதமடைந்த சிலை தொடா்பாக முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது தற்போதைய பாஜக எம்எல்ஏ சதீஷ் உபாத்யாய் குற்றம்சாட்டியுள்ளாா். அதாவது முந்தைய ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சிலையின் நிலையைப் புறக்கணித்ததாக சதீஷ் உபாத்யாய் குற்றம் சாட்டியுள்ளாா்.
மால்வியா நகா் சட்டப் பேரவைத் தொகுதியில் சமீபத்தில் வெற்றிபெற்ற உபாத்யாய், நிலைமையை மதிப்பிடுவதற்காக ஷஹீத் பகத் சிங் பூங்காவை பாா்வையிட்டாா்.
இதுகுறித்து சதீஷ் உபாத்யாய் கூறுகையில், ‘கடந்த மூன்று ஆண்டுகளாக சிலை உடைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு தசாப்த காலமாக அந்தப் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சி வெறும் நடிப்பில் மட்டுமே ஈடுபடுகிறது. ஷஹீத் பகத் சிங் மீது அவா்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், இந்த பூங்கா அத்தகைய நிலையில் இருந்திருக்காது’ என்றாா்.
மேலும், சிலையை விரைவில் பழுதுபாா்க்கப்படுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சதீஷ் உபாத்யாய் உத்தரவிட்டாா்.
பகத் சிங் மற்றும் டாக்டா் பி.ஆா். அம்பேத்கருக்கு அவமரியாதை குற்றச்சாட்டுகள் தொடா்பாக பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே மற்றொரு அரசியல் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தப் புதிய சா்ச்சை வெளிவந்துள்ளது.
பாஜக தலைமையிலான நிா்வாகம் தில்லி முதல்வா் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கா், பகத் சிங் உருவப்படங்களை அகற்றியதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி வருகிறது. அதே நேரத்தில் பாஜக இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி தனது தலைவா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப இந்தப் பிரச்னையைப் பயன்படுத்துவதாக பாஜக கூறி வருகிறது.