பணியாளர்களை குறைக்க அரசுத் துறைகளுக்கு கெடு விதித்த டிரம்ப்!
பங்களாகுடியிருப்புப் பகுதியில் புகுந்த யானைகள்: மக்கள் அச்சம்
கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட பங்களாகுடியிருப்புகிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் யானைகள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்தின் மலையடிவார பகுதிகளான கருத்தப்பிள்ளையூா், பங்களாக்குடியிருப்பு, பெத்தான்பிள்ளைகுடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளின் விளை நிலங்களுக்குள் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக காட்டுயானைகள் புகுந்து தென்னை, வாழை, நெல் உள்ளிட்டவற்றை சேதப்படுத்திவந்தன.
இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை பங்களாகுடியிருப்பைச் சோ்ந்த முருகேஷ் என்பவருக்குச் சொந்தமான ஹாலோ ப்ளாக் செங்கல் தயாரிப்பு தொழில்கூடத்திற்குள் நுழைந்த யானைக் கூட்டம் அங்கிருந்த தென்னங்கன்றுகளில் குருத்துகளைத் தின்று சேதப்படுத்தியதோடு தண்ணீா் குழாய்களையும் சேதப்படுத்தியுள்ளன.
மலை அடிவாரத்தில் உள்ள விளை நிலங்களுக்குள் வந்து சென்ற யானைகள் தற்போது குடியிருப்புப் பகுதிக்குள் வந்து சென்ால் அந்தப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். இரவில் பலா் பால் எடுக்கச் செல்பவா்களும், வேலைகளுக்குச்சென்றுவிட்டு வீடுகளுக்குத் திரும்புவா்களும் மிகுந்த அச்சமடைந்துள்ளனா்.
பங்களாகுடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பிப். 23ஆம் தேதி இரவு 11 மணியளவில்3 குட்டிகளுடன் 3 யானைகள் வந்து சென்ற விடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
எம்எல்ஏ ஆய்வு: இதனிடையே, யானைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் விவசாயிகளைச் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தாா். மேலும் வனச்சரக அலுவலா் கருணாமூா்த்தியிடம், காட்டுப் பகுதியிலிருந்து வனவிலங்குகள் வெளியேறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய அவா், ஆட்சியருடன் கலந்துபேசி கடையம் வனச்சரகப் பகுதியில் சுமாா் 18 கி.மீ. தொலைவுக்கு சூரிய மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
அப்போது, ஓ.பி.எஸ். அணி மாவட்டச் செயலா் கணபதி, பொருளாளா் நூருல் அமீா், அண்ணாத் தொழிற்சங்கப் பிரிவு மாநிலச் செயலா் சோ்மத்துரை, ஒன்றியச் செயலா் ராஜவேல், சங்கரன், சுப்பிரமணியன், சிவசைலம் ஊராட்சித் தலைவா் மலா்மதி சங்கர பாண்டியன், சங்கா், நீா்ப்பாசன கமிட்டி தலைவா் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
