Bihar Results: 243-க்கு கட்சிகள் எடுத்த மார்க் எவ்வளவு? 2020-க்கும் 2025-க்கும் ...
"பணம், பவர், சாதி; நடிகர்கள் அரசியலில் செய்யும் தவறு என்ன?" - விஜய்க்கு அறிவுறை சொன்ன ரோஜா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா.
1999-ஆம் ஆண்டு, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து உள்ளாட்சி அரசியலில் களப்பணிகள், பிரசாரப் பணிகளைச் செய்தார். ஆனால், அரசியலில் ஆரம்ப கட்டத்தில் பல தோல்விகளையும், சருக்கல்களையும் சந்தித்தார்.
அதன்பிறகு 2009-ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். (YSR) காங்கிரசில் இணைந்து, ஆந்திராவின் நகரி தொகுதியில் 2014 மற்றும் 2019 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் 12 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 'லெனின் பாண்டியன்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படம் தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது.
அதுகுறித்துப் பேசியிருக்கும் ரோஜா,
'சிரஞ்சீவி அரசியலில் தோற்க காரணம் என்ன?',
'நடிகர்கள் அரசியல் செய்யும் தவறு என்ன?',
'தேர்தலுக்கு முன் கடைசி 2 மாதத்தில் எதுவும் நடக்கலாம்'
'விஜய்யின் அரசியல் பயணம் எப்படி இருக்கு?'
என்பது குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்.
"ஆந்திராவில் சிரஞ்சீவி சார் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவுடனே CM ஆகணும்னு நினைச்சாரு. ஆனால், மக்களோடு தொடர்பே இல்லாமல் இருந்ததால்தான் சிரஞ்சீவி அரசியலில் தோல்வியடைந்தார்.
அரசியலுக்கு வந்து முதல் தோல்வியைப் பார்த்த உடனே சிரஞ்சீவி ஒதுங்கிவிட்டார். அவர் தொடர்ந்து களத்தில் நின்றிருந்தால் YSR மறைவிற்குப் பிறகு அவர் ஒரு நல்ல அரசியல் தலைவராக உருவெடுத்திருப்பார். அதை அவரது அவசர குணத்தால் தவறவிட்டுவிட்டார்"
நடிகர்களில் பலர் 'என்.டி.ஆர்', 'எம்.ஜி.ஆர்' போல முதல்வராக நினைக்கிறார்கள். ஆனால், அதற்காக களத்தில் இறங்கி உழைக்காமல், சினிமாவைப் போல உடனே முதல்வராக நினைத்து தோல்வியடைகிறார்கள்.
விஜயகாந்த் சார் அரசியலுக்கு வந்ததும் முதலில் சருக்கல்களைக் கண்டார். ஆனால் மக்களுக்காக களத்தில் நின்று விடாமல் களப்பணியாற்றியதால் அடுத்த தேர்தலிலேயே 29 தொகுதியில் வென்று அரசியலில் வெற்றி பெற்றார்.

"விஜயகாந்த் சாரைப் போல தோல்விகளைக் கண்டு பயப்படாமல் அரசியலில் நிற்க வேண்டும். ஆனால், பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தவுடனே முதல்வராக கையெழுத்துப் போட நினைக்கிறார்கள். மக்களோடு தொடர்பே இல்லாமல், களப்பணி செய்யாமல் தேர்தலில் தோல்வியைக் கண்டதும் ஓடிவிடுகிறார்கள்"
"விஜய் அரசியலில் சாதிக்க வேண்டுமென ரொம்ப நாளாகத் திட்டமிட்டு வருகிறார்.
தேர்தலைப் பொறுத்தவரை கடைசி 2 மாதங்கள்தான் ரொம்பவும் முக்கியமானது. அப்போது யார் இறங்கி மக்களை கவர்கிறார்ளோ அவர்கள்தான் பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள்.
பொய் சொல்லியோ, பணம் கொடுத்தோ, உண்மையான அரசியல் பண்ணியோ யார் மக்களை கடைசி 2 மாதத்தில் எப்படியாவது கவர்கிறார்களோ அவர்களுக்குத்தான் வெற்றி என்ற நிலை இங்க இருக்கு

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் சினிமாவில் இருந்து வந்து அரசியலில் சாதித்தார்கள். விஜய காந்த் உடல்நலம் நன்றாக இருந்திருந்தால் இன்னும் அரசியலில் பல உயரங்களைத் தொட்டிருப்பார்.
அதேசமயம் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து தோல்வியடைந்தவர்களையும் நிறையப் பார்த்திருக்கிறோம்.
விஜய் சார் சினிமாவை ஒட்டுமொத்தமாக விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பது நல்ல விஷயம்தான். அவர் மக்களோடு, மக்களுக்காகக் களப்பணியாற்ற வேண்டும்.
எல்லாவற்றையும் தாண்டி எல்லாம் மக்கள் கையில்தான் இருக்கிறது. அதை யாரும் கணிக்க முடியாது" என்று பேசியிருக்கிறார் ரோஜா.













