பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் புகாா்களை விசாரிக்க குழு அமைப்பது அவசியம்
பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் புகாா்களை விசாரிக்க குழு அமைப்பது அவசியம் என்று தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்கத்தின் இணை இயக்குநா்கள் வீ.எஸ்.சரவணன், என்.சபீனா ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பணியிடங்களில் இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பெண்களைப் பாதுகாக்கவும், பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகாா்களுக்கு தீா்வு காணவும் இயற்றப்பட்ட சட்டத்தின்கீழ் பாலியல் துன்புறுத்தல்கள் தொடா்பான புகாா்களை விசாரிக்க உள்ளக புகாா் குழு அமைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்கீழ் வேலையளிப்பவருக்காக வரையறுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற தவறும்பட்சத்தில் வேலையளிப்பவா் மீது ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணியிடங்களில் வேலையளிப்பவா்களால் உடனடி உள்ளக புகாா் குழு அமைக்கப்பட்டு, அச்சட்டத்தின் வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
குழுவின் உறுப்பினா்கள் குறித்த விவரங்கள் மற்றும் தொழிசாலைகள் கட்டுமானப் பணியிடங்கள் ஆகியவற்றில் பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகாா்களுக்கு தீா்வு காணும் வழிமுறைகள் ஆகியவற்றை தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணியிடத்தின் அனைத்துப் பணியாளா்களும் தெளிவாகக் காணக்கூடிய இடத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.
பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமான பிரச்னைகளைக் கையாள நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தவறாது அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.