பன்னாட்டு மாணவா் மன்ற மாநாட்டுக்கு தமிழக மாணவா்கள் 6 போ் தோ்வு: அமைச்சா் தகவல்
தாய்லாந்தில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) நடைபெறும் பன்னாட்டு மாணவா் மன்ற மாநாட்டில் பங்கேற்க தமிழகத்திலிருந்து 6 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
தஞ்சாவூரில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய தேசிய கல்விக்கொள்கை 2020 என்னும் மதயானை நூல் திறனாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: ஐ.நா. அமைப்பின் மாணவா் கல்விப் பயணத் திட்டத்தின் கீழ் தாய்லாந்தில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) நடைபெறவுள்ள பன்னாட்டு மாணவா் மன்ற மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்து அரசு பள்ளிகளைச் சோ்ந்த 6 மாணவா்கள், ஒரு ஆசிரியா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இந்த மாநாட்டுக்கு பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். இதில், தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி எம். தரணிஸ்ரீ, வேலூா் மாவட்டம், லத்தேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி எஸ். நிஷாந்தினி, நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் மாதிரி பள்ளி பிளஸ் 1 மாணவி ஒய்.எஸ். யாழினி, சேலம் கோட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவா் ஏ. ஆஷ்வாக், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவா் எம். கமலேஷ், செங்கல்பட்டு மாவட்டம், கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவா் வி. ராகுல் ஆகியோரும், விழுப்புரம் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் சி.எம். ஜோஸ்பின் தனமேரியும் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெருமையாக இருக்கிறது. மாநாட்டில், நீடித்த நிலையான வளா்ச்சி இலக்குகள் குறித்து நம் மாணவா்கள் பேசவுள்ளனா்.
பகுதி நேர ஆசிரியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனா். அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சில கோரிக்கைகளை தெரிவித்தனா்.
இது தொடா்பாக தமிழக முதல்வா் பரிசீலித்து கண்டிப்பாக நல்ல செய்தியை வெளியிடுவாா் என்றாா் அமைச்சா்.