பிக்பாஸ் பிரபலம் மகாராஷ்டிர தேர்தலில் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி!
பருவமழையால் குன்னூா் சுற்று வட்டாரங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
குன்னூரில் பெய்து வரும் பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்ததால் திங்கள்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில், குன்னூா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பரவலாக பெய்த மழை காரணமாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன.
இதில் குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் குரும்பாடி, காட்டேரி பூங்கா, குன்னூா் சப்ளை டிப்போ, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினா் மரங்களை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினா்.
தொடா் மழை பெய்யக் கூடும் என்பதால் குன்னூா் வட்டத்துக்கு உள்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உத்தரவிட்டிருந்தாா்.
மேலும், அதிக மழைப் பெய்து பாதிப்புகள் ஏற்படும் என்று பொது மக்கள் கருதினால், மாவட்டத்தில் தயாராக உள்ள 456 சிறப்பு முகாம்களுக்கு பொதுமக்கள் சென்று பாதுகாப்புடன் இருக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.