பறவை மோதல்? ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசர தரையிறக்கம்!
விசாகப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், என்ஜின் கோளாரால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், விசாகப்பட்டினத்தில் இருந்து 103 பயணிகளுடன் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்திற்கு இன்று (செப்.18) மதியம் 2.38 மணியளவில் புறப்பட்டுச் சென்றது.
இந்நிலையில், விமானம் பறக்கத் துவங்கிய சில நிமிடங்கள் கழித்து, மாலை 3 மணியளவில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறி, விமானத்தை மீண்டும் தரையிறக்க விமானி அனுமதி கோரியுள்ளார். இதையடுத்து, விமானம் திருப்பப்பட்டு மீண்டும் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, அவர்களது பயணத்துக்கான மறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, விசாகப்பட்டினம் விமான நிலைய இயக்குநர் எஸ். ராஜா ரெட்டி கூறுகையில், விமானம் பறக்கத் துவங்கிய சில நிமிடங்களில், நடுவானில் பறவை மோதியதால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறது; ஆனால், பதில் எங்கே? - காங்கிரஸ் கேள்வி