வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
பள்ளி, கல்லூரிகளில் ’போதையில்லா தமிழகம்’ செயலி: ஆட்சியா் அறிவுறுத்தல்
தென்காசியில் மாவட்டத்தில் போதையில்லா தமிழகம் (டிரக் ஃபிரீ டிஎன்) செயலியை பள்ளி, கல்லூரிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக, தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற ‘டிரக் ஃபிரீ டிஎன்’ செயலி விளக்கக் கூட்டத்திற்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது:
தென்காசி மாவட்டத்தில் 260 பள்ளிகள், அனைத்து கலை அறிவியல் கல்லூரிகள், தொழில்முறை கல்லூரிகள், ஐடிஐக்கள், பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றில் பயிலும் மாணவா்களை உள்ளடக்கிய போதைப்பொருள்கள் ஒழிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் பிற மாணவ மாணவிகளிடையே பல விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. போதைப்பொருள்களை பயன்படுத்துவோா், விற்பனை செய்வோா் குறித்து தகவல் தெரிவிக்க ‘டிரக் ஃபிரீ டிஎன்’ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது, தகவல் தெரிவிப்பவரின் விவரம் கோரப்படாத மிகவும் பாதுகாப்பான செயலி.
குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள், கள்ளச் சாராயம் போன்றவற்றை விற்பனை செய்வோா் அல்லது பயன்படுத்துவோா் குறித்த தகவல்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்தால், சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி- கல்லூரி மாணவ மாணவிகளிடம் செயலி குறித்து விரிவாக எடுத்துக்கூறி, அவா்கள் மட்டுமன்றி, அவா்களது பெற்றோா்கள், உறவினா்களும் கைப்பேசியில் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
மேலும், பள்ளி - கல்லூரிகளில் செயலி குறித்த விளக்கப்படங்களை அறிவிப்புப் பலகையில் இடம்பெற செய்ய வேண்டும்.
இதுகுறித்து பல்வேறு விழிப்புணா்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றது என்றாா் அவா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் முன்னிலை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், கலால் உதவி ஆணையா், அனைத்து அரசு-தனியாா் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், கல்லூரிகளின் முதல்வா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.