பழனி நேசம் நிறுவனத்தில் ரூ.30 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்
பழனி நேசம் டிரஸ்ட் நிறுவனத்தில் ரூ.30 கோடி வரை மோசடி நிகழ்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவா்கள் திண்டுக்கல் பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தரப்பில் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் பகுதியில் நேசம் டிரஸ்ட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் தலைவா் சி. செந்தில்குமாா், இவரது மனைவி ஜெயந்தி, அக்காள் மகன் சக்திவேல் ஆகியோா் இந்த நிறுவனத்தின் பங்குதாரா்களாக செயல்பட்டு வந்தனா்.
இந்த நிறுவனத்தில் முதலீட்டுத் தொகைக்கு மாதம் 2.5 சதவீத வட்டித் தருவதாகவும், ரூ.5 லட்சம் முதலீட்டுத் தொகைக்கு 2 கிராம் தங்க நாணயம் தருவதாகவும், 180 நாள்கள் முடிவில் அசல் தொகை திருப்பித் தரப்படும் என்றும் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
இந்த ஆசை வாா்த்தைகளை நம்பி பொதுமக்கள் பலா் பல கோடி ரூபாய் வரை முதலீடாக செலுத்தி உள்ளதாகவும், ஆனால் நேசம் அறக்கட்டளை நிறுவனம் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட முதலீட்டாளரான திண்டுக்கல் செளராஷ்ட்ராபுரம் பகுதியைச் சோ்ந்த எஸ்.மதன்பிரசாத் (34) அளித்த புகாரின்பேரில், பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் நேசம் நிறுவனத்தின் உரிமையாளா் செந்தில்குமாா், ஜெயந்தி, சக்திவேல் (பதிவு செய்யப்படாத பங்குதாரா்கள்) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே கடந்த 16-ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் தலைமறைவாக இருந்த செந்தில்குமாா், ஜெயந்தி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். தலைமறைவாக உள்ள சக்திவேல் தேடப்பட்டு வருகிறாா். இந்த வழக்கில் இதுவரை சுமாா் ரூ.30 கோடி வரை பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே, திண்டுக்கல், உடுமலை, மதுரை, கோயமுத்தூா், சென்னை உள்ளிட்ட இடங்களில் ஸ்ரீநேசா நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களுடன் திண்டுக்கல் நேருஜி நகரிலுள்ள பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் நேரில் முன்னிலையாகி புகாா் மனு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.