அஜித் படம் கைவிடப்பட்டது ஏன்? இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம்!
பாக்ஸர் வடிவேலு, ஜெயிலர் ஜெயக்குமார்... உண்மை சம்பவமா சொர்க்கவாசல்? - திரை விமர்சனம்
இயக்குநர் சித்தார்த் விஸ்வனநாத் இயக்கத்தில் நடிகர் ஆர். ஜே. பாலாஜி நடித்த சொர்க்கவாசல் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சொர்க்கவாசல் கதையை அறிவதற்கு முன் ஒரு உண்மை சம்பவத்தை நினைவுபடுத்த வேண்டும். இந்திய சிறைச்சாலை வரலாற்றையே திருப்பிப்போடும் வகையில் 1999-ல் சென்னை மத்திய சிறைச்சாலையில் கைதிகளால் ஏற்பட்ட கலவரத்தில் ஜெயிலர் ஜெயக்குமார் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டார். கலவரத்திற்கான முதன்மைக் காரணம் குண்டாஸ் ரௌடியான பாக்ஸர் வடிவேலுவின் மரணம். குத்துச்சண்டை வீரராக பெயர்பெற்ற வடிவேலு, கட்டபஞ்சாயத்து, கடத்தல் என சின்னச் சின்னதாக வளர்ந்தவர் ஒருகட்டத்தில் பெரிய ரௌடியாக மாறுகிறார். அப்படி, 1998-ல் பாக்ஸர் வடிவேலு மீது குண்டாஸ் வழக்கு போடப்பட்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார். வெளியே இருந்ததுபோல் உள்ளேயும் வடிவேலுக்கு ரௌடிகளின் ஆதரவு கிடைக்கிறது. உள்ளே பயங்கர செல்வாக்குடன் மொத்த சிறைக்கும் ராஜாபோல் வலம் வருகிறார்.
சரியாக, 17.11.1999 அன்று வயிற்றுவலியால் பயங்கரமாகத் துடித்த வடிவேலுவை சிறைக்காவலர்கள் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும் அங்கு, மாரடப்பைப்பால் வடிவேலு உயிரிழந்ததாகச் சொல்கிறார்கள். எந்தப் போதைப்பழக்கும் இல்லாத கட்டுமஸ்தான 35 வயதான குத்துச்சண்டை வீரர் திடீரென வந்த வயிற்றுவலியால் மாரடைப்பு வந்து உயிரிழந்தார் என்றால் நம்புவார்களா? அடுத்தநாள் காலை மத்திய சிறைச்சாலை வெடித்தது. வடிவேலுவை அடித்துக் கொன்றுவிட்டார்கள் என கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் கலவரம் செய்ய ஆரம்பிக்கின்றனர். அந்த கொடூர கலவரத்தில் ஜெயிலர் ஜெயக்குமார் அடித்துக்கொல்லப்படுகிறார்.
கலவரத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. அரசுத் தரப்பில் கலவரத்தால் காவலர்கள் உள்பட 11 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், 100க்கும் மேற்பட்ட கைதிகளைச் சுட்டுகொன்றதாகக் கூறுகின்றனர் சம்பவத்தன்று சிறையில் இருந்தவர்கள். உண்மையில் பாக்ஸர் வடிவேலு எப்படி இறந்தார்? ஜெயிலர் ஜெயக்குமாரை கொன்றது யார்? என்கிற கேள்விகளுக்கு இன்று வரை ஆதாரமான பதில் என எதுவுமில்லை. ஓய்வுபெற்ற சிறைத்துறை டிஐஜி ராமச்சந்திரன் இச்சம்பவத்திற்கு ஒரு கதை சொன்னால் அன்று சிறையிலிருந்த தடா ரஹீம் போன்றவர்கள் மறுபக்கத்தைச் சொல்கின்றனர்.
இதையும் படிக்க: சென்னை மத்திய சிறைக் கலவரம் நடந்து 25 ஆண்டுகள்!
சொர்க்கவாசல் இந்த உண்மையை இன்னொரு கோணத்தில் பதிவு செய்கிறது. மத்திய சிறைச்சாலையில் பாக்ஸிங் தெரிந்த பெரிய ரௌடியாக இருக்கும் சிகா (செல்வராகவன்) திருந்தி வாழ ஆசைப்பட்டு தன் ஆதரவாளர்களிடம் எந்தப் பிரச்னையையும் செய்யக்கூடாது என வழிநடத்தவும் செய்கிறார். அப்படியான ஒரு சூழலில் செய்யாத குற்றத்திற்கு சிறை செல்கிறார் பார்த்திபன் (ஆர். ஜே. பாலாஜி). சிறைச்சாலையின் உக்கிரம் பார்த்திபனை கடுமையாக சோதிக்கிறது. அதேநேரம், புதிதாக பணிக்கு வரும் துணை ஜெயிலர் சுனில் குமாருக்கு (ஷராஃபுதீன்) சிகாவின் நடவடிக்கைகள் ஆணவத்தை சீண்டுகின்றன. எப்படியாவது சிகாவை அடக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார். சிறைச்சாலை காவல் அதிகாரிகளின் அரசியல், கைதிகளின் வன்முறை என மேலே சொன்ன உண்மைச் சம்பவத்தை அப்படியே காட்சிப்படுத்துகிறார்கள். 1999 கலவரத்தில் என்னென்ன உண்மைகள் மறைக்கப்பட்டதோ அதை மறுபார்வை கொண்டு இயக்குநர் இதுவரை யாரும் அணுகாத இன்னொரு திசைநோக்கி நகர்த்துகிறார்.
‘சொர்க்கவாசலுக்கு முன் மண்டியிடலாமா இல்லை நரகத்திற்கு ராஜாவாக இருக்கலாமா’ என்கிற வசனத்தை நிரப்பும் படமாகவே சொர்க்கவாசல் உருவாகியிருக்கிறது.
இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்துக்கு இது முதல் படம். ஆனால், சில தடுமாற்றங்களைக் களைந்து கவனித்தால் முதிர்ச்சியான சிந்தனையுள்ளவராகவே தெரிகிறார். சிறைச்சாலை என்றாலே அப்பாவிக் கைதிகள் அதிகாரமிக்க சிறைத்துறை என்கிற பார்வையைப் பிரச்சாரம் செய்யாமல் இருதரப்பும் எப்படியானவர்கள் என நியாயமாகப் பதிவு செய்திருக்கிறார். மத்திய சிறைக் கலவரத்திற்கு பல வண்ணங்கள் பூசப்பட்டாலும் ஒரு படைப்பாளி தொடும் புள்ளிகளும் இருக்கின்றன.
சமீபத்தில், ஜெயிலர் ஜெயக்குமார் இறந்து 25 ஆண்டுகள் முடிந்ததையொட்டி சிலர் நினைவஞ்சலி செலுத்தினர். ஆனால், இத்தனையாண்டுகளில் ஒரு நேர்மையான அதிகாரி சிறைக்கைதிகளால் கொல்லப்பட்டார் என்கிற தகவல் மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஆனால், அந்த அதிகாரி செய்த செயல்களும் அவரைச் சுற்றி நடந்த அரசியல்களும் நமக்கு காட்டப்பட்டனவா? இல்லை. ஒரு கலவரம் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது. அந்தக் கலவரத்தைத் தொட்டு ஆவணப்படுத்தக்கூடிய இன்னொரு பக்கத்தையும் சொர்க்கவாசலில் இயக்குநர் காட்டியிருக்கிறார். முதல் படத்திலேயே சிறைக் கலவரத்தை தத்ரூபமாக காட்சிப்படுத்தியது, அந்தெந்த நேரத்து உணர்ச்சிகளைக் கதாபாத்திரங்களுக்குள் வைத்தது என கவனம் ஈர்க்கிறார். சிறைச்சாலை சுவர்களில் எழுதியிருக்கும், ‘சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்’ என்கிற வாசகங்களைத் தொட்டு படம் முழுவதும் பரபரப்பைக் கூட்டியிருப்பது சிறப்பு.
கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த சில விவரணைகள் தேவைதான் என்றாலும் காட்சிகளாகப் பார்க்கும்போது ஆர்வம் குறையும்படியான திரைக்கதை முதல் பாதியில் சில தடுமாற்றங்களைத் தருகிறது. ஆனால், இரண்டாம் பாதி தீப்பிடித்ததுபோல் பரபரப்பாக செல்கிறது. படத்தின் பலம் இரண்டாம் பாதிதான். பல கேள்விகளுக்கான பதில்கள் வெளிவருவது, முடித்து வைக்கப்பட்ட விசாரணையை துவங்கியதுபோல் ஆர்வத்தைத் தூண்டுகிறது. படத்தின் பெரிய பலவீனம் செல்வராகவன். சென்னை மத்திய சிறைச்சாலையே நடுங்கிக்கொண்டிருந்த ரௌடியாக செல்வராகவனை பார்க்க முடியவில்லை. அழுத்தமான கதையை உருவாக்கிய இயக்குநர் சிகா கதாபாத்திரத்தில் ஏன் கோட்டைவிட்டார்? மோசமான கதாபாத்திர தேர்வு.
இதுவரை நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலுமாக விலகி நடித்திருக்கிறார் ஆர். ஜே. பாலாஜி. ஆரம்பத்தில் பாலாஜியின் நடிப்பு செயற்கைத்தனமாக இருப்பதாகப்பட்டாலும் இரண்டாம் பாதியின்போது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் நடிப்பை வழங்கிவிட்டார். உடைந்து அழும் காட்சிகளில் சிறையின் கொடூரத்தை உணர வைத்திருக்கிறார்.
சிகாவின் ஆதரவாளராக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஹக்கிம் ஷா (டைகர் மணி). கிளைமேக்ஸ் காட்சிகளில் ஹக்கிம் ஷாவின் நடிப்பே பரபரப்பைக் கூட்டுகிறது. நல்ல கதாபாத்திர வடிவமைப்பு. கருணாஸ், சாஃபாருதீன் உள்ளிட்டோருக்கு கனமான கதாபாத்திரங்கள். தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாகவே கையாண்டு வருகிறார் கருணாஸ். செல்வராகவன், பாலாஜி சக்திவேல், நட்டி, சானியா ஐயப்பன் உள்ளிட்டோரும் தேவையான நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.
கதைக்கு ஏற்ற பக்கபலமாக கலை இயக்குநரும் இசையமைப்பாளரும் படத்தின் தரத்திற்குப் பெரிதாக உதவியிருக்கின்றனர். கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை கதைக்குக் கச்சிதமாக இருக்கிறது. ஒளிப்பதிவும் செல்வா ஆர்கே எடிட்டிங்கும் நன்றாக இருந்தது.
ஒரு உண்மை சம்பவத்தின் கதாபாத்திரங்களைத் திரைக்கேற்ப மாற்றி, 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வைப் படைப்பாளியின் கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பது இன்னொரு அனுபவத்தைத் தருவதுடன் சாமானியர்களுக்கும் அதிகாரத்திற்கும் இடையே எத்தனை பெரிய இடைவெளி என்பதை முகத்தில் அறைந்ததுபோல் சொர்க்கவாசல் பதிவு செய்கிறது. 1999-ல் பாக்ஸர் வடிவேலு இறந்ததும் மத்திய சிறைச்சாலைப் போர்க்களமாக மாறி பலரின் ரத்தங்கள் சகதியாக சிறைக்குள் உறைந்திருக்கிறது. முன்னாள் கைதிகள், பத்திரிகையாளர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் என ஒவ்வொருவரின் பார்வையிலும் இக்கலவரத்திற்கு வேறுவேறு அரிதாரங்கள் இருக்கின்றன.
வடிவேலுவின் ஆதரவாளரான- 2007-ல் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட ரௌடி வெள்ளை ரவிதான் (படத்தில் டைகர் மணி வெள்ளை ரவி தோற்றத்தில்தான் இருக்கிறார்) ஜெயிலர் ஜெயக்குமாரை கொன்றதாகவும் சிலர் கூறுகின்றனர். அதேநேரம், பெரிய ரௌடிகள் யாரும் கலவரத்திற்குள் வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு யார் யாரைக் கொன்றது என்கிற கேள்விகளுக்கும் உண்மையில் சிறைச்சாலைகள் குற்றவாளிகளைத் திருத்துகிறதா உருவாக்குகிறதா என்கிற பார்வைகளுக்கும் இயக்குநர் சித்தார்த் அழுத்தமான பதிலைக் கொடுத்திருக்கிறார். படத்தின் கதை சில சர்ச்சைகளை ஏற்படுத்தலாம். முக்கியமாக, கருணாஸ் கதாபாத்திரம்.
1999 சிறைக் கலவரம் குறித்து ஓய்வுபெற்ற டிஐஜி ராமச்சந்திரன், சம்பவத்தன்று சிறையிலிருந்த தடா ரஹீம் உள்பட பலரின் பார்வைகள் நேர்காணல்களாக யூடியூபில் இருக்கின்றன. அவற்றைப் பார்த்துவிட்டு ‘சொர்க்கவாசலுக்கு’ செல்லலாம். வேறுவேறு கதவுகள் திறக்கும்!