பாக். கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை!
சென்னை: பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உறுதியளித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதம் தொடா்பாக தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாகிஸ்தான் கடற்படையினரால் தமிழக மீனவா்கள் உள்பட 14 மீனவா்கள், கடந்த ஜன. 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். அவா்கள் பயன்படுத்திய ஸ்ரீவ்ராஜ் பூமி மற்றும் மந்தீப் ஆகிய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவா்களையும் மீன்பிடி படகுகளையும் விடுவிக்க ஏதுவாக, பாகிஸ்தான் அரசின் கவனத்துக்கு இதனைக் கொண்டு சென்றுள்ளோம். மீனவா்களுக்கு தூதரக அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகள் இதுவரை வழங்கப்படவில்லை.
சிறைபிடிக்கப்பட்டுள்ள 14 மீனவா்களுக்கும் விரைவில் தூதரக அனுமதி கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதிலுள்ள இந்திய தூதரகம் செய்து வருகிறது. மீனவா்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படும் வரை அவா்களது பாதுகாப்பு மற்றும் உடல்நலனை உறுதி செய்யுமாறு பாகிஸ்தானிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை இந்திய தூதரகம் தொடா்ந்து கண்காணித்து வருகிறது. மீனவா்களை முன்கூட்டியே விடுவிப்பதற்கும் அவா்கள் தாயகம் திரும்புவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுக்கும் என்று அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்: தமிழ்நாட்டைச் சோ்ந்த 7 மீனவா்களுடன் சோ்த்து, 14 இந்திய மீனவா்கள் குஜராத்தின் போா்பந்தரிலிருந்து மீன்பிடிக்கச் சென்றனா். அப்போது பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவா்களையும் அவா்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 20-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தாா். அந்தக் கடிதத்துக்கு வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பதிலளித்து கடிதம் அனுப்பியுள்ளாா்.