பாதுகாப்பானதா, மினரல் வாட்டர்?
கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில், உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர பிரதாப் சிங் கலந்துகொண்ட ஒரு அலுவல் கூட்டத்தில் 'பில்செரி' என்று பெயரிடப்பட்ட ஒரு தண்ணீர் பாட்டில் அவரது மேஜையில் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து உடனடியாக அதுகுறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு உணவுப் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில், அந்த தண்ணீர் பாட்டில்களில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) முத்திரை இல்லை என்பதும் பாக்பத் மாவட்டத்தில் உள்ள கௌரிபூர் நிவாடா கிராமத்தில் உள்ள ஒரு கடையில் இது விற்கப்பட்டு வந்ததும் தெரிய வந்தது. உடனடியாக 2,600-க்கும் மேற்பட்ட போலியான தண்ணீர் பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
மினரல் வாட்டர் நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்பு தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இது உத்தரப் பிரதேசத்தில் தற்செயலாக வெளிப்பட்ட சம்பவம். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்ல, இந்த நிலைமை என்னவோ நாட்டில் வேறெந்த ஒரு மாநிலத்துக்கும் மாவட்டத்துக்கும்கூட பொருந்தும். ஏனெனில், வாங்குகிற ஒவ்வொரு மினரல் வாட்டர் பாட்டிலும் பாதுகாப்பானதா என்று யாரும் எங்கேயும் உறுதிப்படுத்திக் கொள்வதில்லை!
இந்ச சம்பவம் போலி பெயரில் தயாரிக்கும் பொருள்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருந்தாலும், நாம் அருந்தும் தண்ணீரின் தரம், பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
நம் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான அத்தியாவசியமான நீர் தரமானதா? விலை கொடுத்து பாட்டில்களில் வாங்கிக் குடிக்கும் நீர் பாதுகாப்பானதா?
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (மினரல் வாட்டர்)
கனிமங்களுடனான சுத்திகரிக்கப்பட்ட அல்லது தூய்மைப்படுத்தப்பட்ட நீர் எனும் 'மினரல் வாட்டர்' என்பது தற்போது மக்கள் மத்தியில் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது.
இந்த முறையில் தண்ணீரைச் சுத்திகரிக்கும்போது அதிலுள்ள நம் உடலுக்குத் தேவையான முக்கியமான கனிமங்கள், தாதுக்களை இழப்பதாக மண் மற்றும் நீர் மாசு கண்காணிப்பில் பணிபுரியும் ஓம்கார் கோன்கர் என்பவர் கூறுகிறார்.
'இயற்கையான நீரில் மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை உடல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நீரை சுத்திகரிக்கும்போது அதில் உள்ள கனிமங்கள், தாதுக்கள் இழக்கப்படுகின்றன. மெக்னீசியம், ஆற்றல் உற்பத்திக்கும் தசை செயல்பாட்டிற்கும் இன்றியமையாதது. கால்சியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியம். இந்த தாதுக்கள் அகற்றப்படும்போது தண்ணீரில் உள்ள சத்துகள் குறைகின்றன' என அதிர்ச்சியளிக்கும் தகவலைக் கூறுகிறார்.
தில்லியைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரான ஃபாத்திமா சோஹ்ராவும் இதனை உறுதிப்படுத்துகிறார்.
'சுத்திகரிக்கப்பட்ட நீர் உங்கள் தாகத்தைத் தணிக்கலாம், ஆனால் அது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த எதுவும் செய்யாது. மாறாக, தசைப்பிடிப்பு முதல் எலும்பு பிரச்னைகள் வரை பல உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்' என்று கூறுகிறார்.
இதையும் படிக்க | ஃபகத் ஃபாசில், ஆலியா பட்... இன்னும் பலர்! ஏடிஎச்டி என்பது என்ன? காரணங்களும் தீர்வுகளும்!
இயற்கையான நீரும் சுத்திகரிக்கப்பட்ட நீரும்
சுத்திகரிக்கப்பட்ட நீர் என்று பாட்டில்களில் தண்ணீர் விற்கும் குறிப்பிட்ட நிறுவனங்கள், நீரை சுத்திகரிப்பு செய்தபிறகு அதில் மீண்டும் கனிமங்கள் சேர்க்கப்படுவதாகக் கூறுகின்றன. ஆனால் இந்த செயல்முறை சரியானது அல்ல. இயற்கையான நீரில் உள்ள கனிமங்களை நீக்கிய பிறகு அதே கலவையை மீண்டும் செயற்கையான முறையில் கொண்டுவர முடியாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நீரில் உள்ள கனிமங்களின் தன்மையும் மாறுபட்டிருக்கும் என்கின்றனர்.
இயற்கையான தண்ணீரில் உள்ள கனிமங்களின் கலவையைப் போலவே நிறுவனங்கள் செயற்கையாக தண்ணீரில் சேர்த்தாலும் அதன் முடிவுகள் ஒன்றாக இருக்காது, மாறுபட்டிருக்கும். அது இயற்கையான நீரைப் போன்று ஆரோக்கிய நன்மைகளைத் தராது என்கின்றனர்.
'உரவு' லேப்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஸ்வப்னில் ஸ்ரீவாஸ்தவ் கூறுகையில், சுத்திகரிக்கப்பட்ட நீரில் மீண்டும் கனிமங்களை சேர்த்தாலும் அது இயற்கையான நீரில் உள்ள கனிம சமநிலையைக் கொண்டிருக்காது என்றும் இயற்கையான நீரில் உள்ள கனிமங்களை செயற்கையான நீரில் கொண்டுவருவது கடினம் என்றும் கூறுகிறார்.
'இயற்கையான நீரில் முதலில் என்ன இருக்கிறது என்பதையும் அதன் பின்னர் எதை நீக்குகிறீர்கள், எதை மீண்டும் சேர்க்கிறீர்கள் என்பதையும் புரிந்துகொள்வது அவசியம். ஒவ்வொரு இடத்திலும் உள்ள இயற்கையான நீரில் உள்ள மெக்னீசியம், பயோகார்பனேட்டுகளின் அளவு மாறுவதால் சுத்திகரிப்பு செயல்முறையும் மாறலாம். எனினும் விரிவான செயல்முறையில், இயற்கையான நீரில் உள்ள கனிம கலவையை ஓரளவு நெருங்க முடியும்' என்கிறார்.
இதையும் படிக்க | பகலில் தூக்கம் வருகிறதா? மறதியின் அறிகுறியாக இருக்கலாம்! - ஆய்வில் தகவல்!
பாட்டில் நீர் ஆரோக்கியமற்றதா?
கனிமங்கள் நீக்கப்பட்ட நீரை குடிப்பது உடலில் நீரேற்றத்தை மட்டுமே தரும், எந்த ஆரோக்கியத்தையும் அளிக்காது, மாறாக உடலுக்கு பல்வேறு தீங்குகளை விளைவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
இஸ்ரேலில் டப் சென்டர் நடத்திய ஆய்வில் அத்தியாவசிய தாதுக்கள் இல்லாத, உப்பு நீக்கப்பட்ட தண்ணீரை உட்கொள்வதால் (மெக்னீசியம் குறைபாடு), டைப் 2 நீரிழிவு, பக்கவாதம், இதய பிரச்னைகள் ஏற்படும் என்று கூறியுள்ளது.
தண்ணீரில் உள்ள கனிம இழப்பை மக்கள் பெரிதாக கண்டுகொள்வதில்லை. சோர்வு, எரிச்சல், செரிமான பிரச்னைகளுக்கு தண்ணீரில் போதுமான கனிமங்கள் இல்லாதது காரணமாக இருக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணரான ஃபாத்திமா சோஹ்ரா கூறுகிறார்.
இந்தியாவில் மினரல் வாட்டர் நிறுவனங்களின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
சுற்றுச்சூழல் பிரச்னைகள்
இயற்கை நீர் ஆதாரங்கள் குறைவது, சுகாதார பிரச்னைகள், பாட்டில்களில் தண்ணீர் விற்கப்படுவதால் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்டவையும் ஒருபக்கம் கேள்விக்குறியாக உள்ளது.
உரிமம் பெற்ற உற்பத்தியாளர்களுக்கு இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) விதிமுறைகளை வகுத்துள்ளது. எனினும் பிளாஸ்டிக் பாட்டில்களால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துக் காணப்படுகிறது.
மைக்ரோபிளாஸ்டிக்ஸ்
அதிலும் குறிப்பாக மினரல் வாட்டர் பாட்டில்களில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மிகப்பெரும் கவலையாக மாறியுள்ளது. ஏனெனில் மினரல் வாட்டர் பாட்டில்களில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் எனும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
2018-ல் ஆர்ப் மீடியா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், பிரபலமான தயாரிப்புகளில் பாட்டில் மாதிரிகளில் 93 சதவீதம் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. சராசரியாக ஒரு லிட்டருக்கு 325 பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன. இந்த சிறிய பிளாஸ்டிக் துகள்களின் அளவு 5 மில்லிமீட்டருக்கும் குறைவானது. பாட்டில் செய்யும்போது அல்லது பேக்கிங் செய்யும்போது தண்ணீரில் பிளாஸ்டிக் நுழையலாம்.
மைக்ரோபிளாஸ்டிக்ஸை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதில் நச்சுத்தன்மையான ரசாயனங்கள் இருப்பதால் உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. வீக்கம், சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
பாட்டில்களில் விற்கப்படும் நீரால் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டுமே அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
வெளிப்படைத்தன்மை அவசியம்
சந்தைகளில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்கள் குறித்த வெளிப்படைத்தன்மை அவசியம். அந்த பாட்டில்களில் உள்ள நீரின் கனிம அளவு என்ன? என்னென்ன கனிமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, அவற்றின் நன்மைகள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு அவற்றிற்கு பொறுப்பேற்க வேண்டும்.
பிரபல நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர், முகவரி, பிராண்ட் பெயர், தொகுதி அல்லது குறியீட்டு எண், பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சுத்திகரிக்கப்பட்ட விவரங்கள், காலாவதி தேதி, கட்டாய ஐஎஸ்ஐ குறியீடு, விலை, எப்எஸ்எஸ்ஏஐ உரிம எண் ஆகியவற்றை தெளிவாகக் காட்ட வேண்டும் என்று நுகர்வோர் விவகார அமைச்சகம் கூறுகிறது.
மற்ற அனைத்து உணவுப்பொருள்களைப் போலவே, தண்ணீர் பாட்டில்களில் அனைத்து தகவல்களும் உண்மையாக ஆதாரப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று சர்வதேச மினரல் வாட்டர் பாட்டில் சங்கம் கூறுகிறது.
உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படும் இந்த நேரத்தில் உடலுக்கு நீர்ச்சத்து, ஊட்டச்சத்து ஆகிய இரண்டுக்கும் இந்த நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. நீர் என்பது அத்தியாவசிய தாதுக்களின் முக்கிய ஆதாரம் என்பதை உணர வேண்டும்.
இயற்கையான நீர் போதுமானது!
இவை எல்லாம் ஒருபுறமிருக்க, மக்கள் என்ன செய்ய வேண்டும்? பாட்டில் தண்ணீருக்கு மாற்றே இல்லையா? நல்ல தண்ணீர் பருக என்னதான் செய்யலாம்?
இயற்கையான தண்ணீரில் உள்ள தூசுகளை அகற்ற சாதாரண வடிகட்டுதல் முறையே போதுமானது.
அந்த வகையில் நீரில் உள்ள / இருக்கவேண்டிய நான்கு முக்கியமான தாதுக்கள்:
கால்சியம்: ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு இது அனைத்து வயதினருக்கும் முக்கியமானது.
மெக்னீசியம்: தண்ணீரில் உள்ள ஒரு முக்கியமான தாது. இது இதய நோயைத் தடுக்கிறது
சோடியம்: நீர் மற்றும் தாதுக்களின் சமநிலையை பராமரிக்க சிறிய அளவு சோடியம் தேவை.
புளோரைடு: இயற்கையாகவே உலகின் சில பகுதிகளில் உள்ள நீரில் புளோரைடு காணப்படுகிறது. பல் சிதைவைக் குறைக்க உதவுகிறது. நீரில் இல்லாதபட்சத்தில் செயற்கையாக சேர்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | சர்க்கரை நோய்! கண்டறிவதும் தடுப்பதும் எப்படி?
மாநகராட்சி, நகராட்சி மூலமாக அல்லது நிலத்தடி நீர் குழாய் மூலமாக கிடைக்கும் நீரை வடிகட்டி பின்னர் காய்ச்சி பயன்படுத்தினாலே அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.
சுத்தமான பருத்தித் துணியால் வடிகட்டும்போது தண்ணீரில் உள்ள தூசு உள்ளிட்ட மாசுக்கள் தனியாகப் பிரிந்துவிடும். பின்னர் அதனை காய்ச்சிப் பருகலாம்.
மண்பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து 2 முதல் 5 மணி நேரம் வைத்திருந்தால் மண் இயற்கையாகவே தண்ணீரில் உள்ள அனைத்து மாசுக்கள், வைரஸ், பாக்டீரியாவை உறிஞ்சிக்கொள்ளும். அதனை அப்படியே பருகலாம்.
அதுபோல செம்புப் பாத்திரங்களிலும் தண்ணீர் ஊற்றிவைக்கும்போது சுத்தமான அதேநேரத்தில் கனிமங்கள் அடங்கிய நீர் கிடைக்கும்.
வீடுகளில் உள்ள ஆர்.ஓ. தண்ணீரில் கனிமங்கள் இருக்கிறதா என்பதை சோதனை செய்துகொள்ள வேண்டும். சாதரணமாக ஆர்.ஓ. தண்ணீரில் மாசுக்கள், கனிமங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிடும். இதனாலே அது சுத்தமானதாகவும் சுவையாகவும் இருக்கிறது. ஆனால், நீக்கப்பட்ட கனிமங்கள் மீண்டும் சேர்க்கப்படுவதில்லை என்பதால் எந்த சத்தும் கொண்டிருக்காது. எனவே, 'ரீமினரலைசர்' உள்ள ஆர்.ஓ. கருவிகளை பொருத்தலாம். இது நீரை சுத்திகரிப்பு செய்தபிறகு கனிமங்களை மீண்டும் சேர்த்துவிடும்.
மினரல் வாட்டர் என்றாலும் அதனை நிரப்பும் கொள்கலன், பாட்டில்கள் அசுத்தமாக இருந்தால் உடலுக்குத் தீங்கு ஏற்படும். எனவே, தண்ணீர் இருக்கும் கேன்கள், பாட்டில்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
தாகத்துக்குக் குடிக்க மட்டுமல்ல, தண்ணீர். இதன் பின்னணியில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறையவும் இருக்கின்றன.