TTV Dinakaran: டி.டி.வி.தினகரன் திடீர் டெல்லி பயணம்... பின்னணி என்ன?!
பிறந்த நாளில் சரத்பவாரைச் சந்தித்து வாழ்த்திய அஜித்பவார், அமித் ஷா; யாருக்குக் குறி? யாருக்கு லாபம்?
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்த பிறகு மாநில துணை முதல்வர் அஜித்பவார் இரண்டு முறை சரத்பவாரைச் சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். ஆனால் அஜித்பவாருடன் சரத்பவார் சமானாதமாக செல்லவில்லை.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் சரத்பவார் மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிட்டன. இதில் அஜித்பவார் தலைமையிலான அணி அமோக வெற்றி பெற்றது. நேற்று (டிசம்பர் 12) சரத்பவார் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
டெல்லியிலிருந்த சரத்பவார் இல்லத்திற்கு அஜித்பவார், அவரது மனைவி சுனேந்திரா பவார் மற்றும் மகன் பார்த் பவார் ஆகியோர் சென்று சரத்பவாரைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சகன் புஜ்பால், பிரபுல் பட்டேல், சுனில் தட்கரே ஆகியோரும் சென்றனர். அவர்கள் சரத்பவாருடன் அரை மணி நேரம் பேசினர்.
அமைச்சரவை விரிவாக்கம்
இந்த சந்திப்பின்போது மீண்டும் சரத்பவாரிடம் கட்சியை ஒன்றாக இணைப்பது குறித்து பேசியதாகத் தெரிகிறது. இச்சந்திப்புக்குப் பிறகு நிருபர்களுக்குப் பேட்டியளித்த அஜித்பவார், "பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தோம். பர்பானி கலவரம், அமைச்சரவை விரிவாக்கம், பாராளுமன்றத்தை முடங்குவது குறித்து நாங்கள் விவாதித்தோம்'' என்றார்.
இந்த சந்திப்பின்போது சரத்பவார் மகள் சுப்ரியா சுலே மற்றும் அஜித்பவாரை எதிர்த்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சரத்பவாரின் பேரன் யுகேந்திர பவார் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அமித் ஷாவும் நேரில் வாழ்த்து
இரு தரப்பினரும் சட்டமன்றத் தேர்தலில் பெரிய அளவில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில்லை. சரத்பவாரைத் தாக்கிப் பேசினால், அது சரத்பவாருக்குச் சாதகமாக முடியும் என்று கருதி அஜித்பவாரும் சரத்பவாரை விமர்சனம் செய்வதைத் தவிர்த்தார். சரத்பவாரின் அணியை தங்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் அஜித்பவார் தீவிரமாக இருக்கிறார். அஜித்பவார் மட்டுமல்லாது நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சரத்பவாரைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அமித் ஷாவை சுப்ரியா சுலே வரவேற்றார்.
மகாராஷ்டிராவில் சரத்பவார் மட்டும் பா.ஜ.க கூட்டணிக்கு வராமல் இருக்கிறார். சரத்பவாரை தங்களது பக்கம் இழுத்துவிட்டால் உத்தவ் தாக்கரேயை ஒரே அடியாக ஓரங்கட்டிவிடலாம் என்று பா.ஜ.க கருதுகிறது. அதனைக் கருத்தில் கொண்டுதான் அமித் ஷா மற்றும் அஜித்பவார் ஆகியோர் தொடர்ந்து சரத்பவாரைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக் கூறிவிட்டு, அரசியல் பேசிவிட்டு வந்திருக்கின்றனர் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...