மாநில கலைத்திருவிழா: மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து
புதிய சாதனையை நோக்கி நகரும் பெர்த் டெஸ்ட்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பெர்த் டெஸ்ட் போட்டி புதிய சாதனையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று (நவம்பர் 22) பெர்த்தில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கும், ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. அனைத்து விக்கெட்டுகளையும் வேகப் பந்துவீச்சாளர்களே வீழ்த்தினர்.
இதையும் படிக்க: மெகா ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார்; முன்னாள் வீரர் நம்பிக்கை!
46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம், இந்திய அணி 218 ரன்கள் முன்னிலையுடன் வலுவாக உள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
புதிய சாதனையை நோக்கி...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியைக் காண முதல் நாளில் 31,302 பேர் வருகை புரிந்துள்ளனர். போட்டியின் இரண்டாம் நாளான இன்று (நவம்பர் 23) 32,368 பேர் வருகை புரிந்துள்ளனர்.
முதல் இரண்டு நாள்களையும் சேர்த்து இதுவரை 63,670 பேர் போட்டியைக் காண மைதானத்துக்கு நேரில் வந்துள்ளனர். போட்டி நிறைவடைய இன்னும் 3 நாள்கள் இருக்கும் நிலையில், அதிக பார்வையாளர்கள் நேரில் கண்டு களித்த டெஸ்ட் போட்டி என்ற சாதனையை நோக்கி பெர்த் டெஸ்ட் போட்டி நகர்ந்து வருகிறது.
இதற்கு முன்னதாக, கடந்த 2006-2007 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின்போது, வாக்கா மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை 1,03,440 பேர் மைதானத்துக்கு நேரில் வந்து கண்டுகளித்ததே இதுவரையில் அதிகபட்ச பார்வையாளர்களை ஈர்த்த போட்டியாக இருந்து வருகிறது.
இதையும் படிக்க: 73% விக்கெட்டுகள் வெளிநாட்டில்..! வித்தியாசமான சாதனை படைத்த பும்ரா!
இந்த சாதனையை முறியடிக்க பெர்த் டெஸ்ட்டின் மீதமுள்ள 3 நாள்களில் 39,771 ரசிகர்கள் போட்டியைக் காண மைதானத்துக்கு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.