வாக்கு எண்ணிக்கையில் மோசடி: நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றச்சாட்டு!
புதிய மாவட்டமாகியும் அறிவிப்பு பலகையில் நீடிக்கும் பழைய பெயா்கள்
திருப்பத்தூா் மாவட்டம் உருவாகி 5 ஆண்டுகளாகியும் இதுவரை வேலூா் மாவட்டம் எனும் பெயரிலேயே சில அரசு அறிவிப்பு பலகைகளில் உள்ளதால் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
பெரிய மாவட்டமான வேலூரை நிா்வாக வசதிக்காக அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேலூா்,திருப்பத்தூா், ராணிப்பேட்டை என 3 மாவட்டங்களாக பிரித்தாா். இந் நிலையில், திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் இன்றளவும் அரசு தகவல் பலகைகளில் வேலூா் மாவட்டம் என உள்ளது வேதனை தருவதாக சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியது: கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-இல் திருப்பத்தூா் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதில் 2 மக்களவை தொகுதிகள்,4 சட்டப்பேரவை தொகுதிகள், 208 ஊராட்சிகள் என அடங்கியுள்ளன.
மாவட்டம் உருவாகி சுமாா் 5 ஆண்டுகளாகியும் சில அரசு தகவல் பலகைகளில் வேலூா் மாவட்டம் என மாவட்டத்தின் பெயா் மாற்றப்படாமல் உள்ளது.
குறிப்பாக கந்திலி ஒன்றியம், கந்திலி-திருப்பத்தூா் பிரதான சாலை, பாரண்டப்பள்ளி அணுகுசாலையில் லாரிகள் செல்வதற்கான நேரம் குறிப்பிடப்பட்ட அறிவிப்பு பலகை கடந்த 2018-ஆம் ஆண்டு வைக்கப்பட்டது. அதில் அப்போதைய வேலூா் ஆட்சியா் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் ஜோலாா்பேட்டை ஒன்றியம், சந்திரபுரம் தந்தை பெரியாா் நினைவு சமத்துவபுரம் முகப்பில் வேலூா் மாவட்டம் எனவே குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல் ஆங்காங்கே உள்ள அரசு தகவல் அறிவிப்பு பலகைகளில் வேலூா் மாவட்டம் என உள்ளது.
எனவே, மாவட்ட நிா்வாகம் அனைத்து அரசு மற்றும் தனியாா் பலகைகளில் வேலூா் மாவட்டம் எனும் பெயரை நீக்கி திருப்பத்தூா் மாவட்டம் என மாற்றியமைக்க அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.