``ரூ.5 லட்சம் சம்பளம்; வேலை இழந்ததால் மனைவி விவாகரத்து'' - டெலிவரி பாயாக மாறிய ப...
புதிய வானம் .. புதிய பூமி..! - தாத்தாவும் நானும் `அன்பே வா’ படம் பார்த்த அனுபவம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
நான் பிறப்பதற்கு இரண்டுவருடங்களுக்கு முன்பு வெளியான "அன்பே வா " திரைப்படத்தை என்னுடைய பத்தாவது வயதில் தீபாவளிக்கு தாத்தாவுடன் சென்று பார்த்த அனுபவத்தை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
பீதாம்பரம் .. அம்மா வழி தாத்தா .. 1950 களின் ஆரம்ப காலகட்டங்களில் மாடி வீடு கட்டி வாழ்ந்த மனிதர் . விவசாயத்துடன் சேர்ந்து சுய தொழிலாக தையல் கடை நடத்தி வந்தார். எனக்கு தெரிந்து எங்கள் பூங்குளம் கிராமத்தில் அவர் ஒருவர் தான் டெய்லர் என்று ஞாபகம் . எங்கள் கிராமத்தில் அப்போதெல்லாம் மின்சாரம் இல்லாத காலகட்டம். அதனால் ஊரில் நடக்கும் சின்ன சின்ன விசேஷங்களுக்கு "பெட்ரோமாக்ஸ்' விளக்கு வாடகைக்கு கொடுத்து வந்தார் ( இது தனி அனுபவம் ..தனிக் கட்டுரையாக எழுதலாம் )

டெய்லரிங் கடை நடத்தி வந்த தாத்தா , எனக்கு ஐந்து வயது இருக்கும்போதே கையில் ஊசியையும் நூலையும் கொடுத்து காஜா மற்றும் பட்டன் தைக்க கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். எட்டு வயதிற்குள் காஜா பட்டன் மற்றும் எம்மிங் ( முழுமையான பொருள் தெரியாவிட்டாலும் மடிப்புகளை ஊசி நூல் கொண்டு கையால் தைப்பது என்று புரிந்து கொள்வோம் ) என்று ஓரளவுக்கு உதவியாளராகவே என்னை வளர்த்து வந்தார் . பள்ளி நேரம் போக டெய்லரிங்தான் பொழுதுபோக்கு .
அப்படியிருக்கையில் , ஒரு முறை நோன்பு நேரத்தில் ( அப்போதெல்லாம் கிராமத்தில் தீபாவளி என்று யாரும் சொல்ல மாட்டார்கள் .. நோன்பு என்று தான் சொல்வார்கள் ) அதிகமாக துணிகள் தைக்க வேண்டியிருந்ததனால் வீட்டில் உள்ள அனைவரையும் உதவிக்கு உட்படுத்தினார் . எல்லோரும் நன்றாக வேலை செய்தால் நோன்பு முடித்து இரவு சினிமாவுக்கு அழைத்து செல்வதாக கூறி உற்சாகப்படுத்தினார்.
அப்படி கிடைத்த வாய்ப்புதான் அன்பே வா திரைப்படம்....
தீபாவளி துணிகள் தைத்து கொடுத்து முடித்துவிட்டு , நோன்பு கும்பிட்டு விட்டு வாக்குறுதி கொடுத்தபடி சினிமாவிற்கு கிளம்பினோம்.

ஒத்தையடி பாதையிலே சுமார் எட்டு கிலோமீட்டர் நடந்தால் வரும் மிட்டூர் கிராமத்தில் உள்ள டூரிங் டாக்கீஸில் , வெளியாகி பனிரெண்டு ஆண்டுகள் கழித்து தீபாவளி சிறப்பு திரைப்படமாக ஓடிக்கொண்டிருந்த அன்பே வா படத்துக்கு அழைத்து சென்றார்
புறப்படும்போது மாலை வேளை என்பதால் கரடு முரடான அந்த பாதையில் தாத்தாவுடன் ஜாலியாக நடந்து போனோம் . போகும் வழியில் உள்ள நிலத்தில் விளைந்திருந்த நிலக்கடலை, கொய்யா , சோளம் என்று வழியெங்கும் பறித்து கொடுத்தார்.
சினிமா கொட்டகையை நெருங்கி விட்டோம் என்பதை தூரத்தில் இருந்து கேட்ட பாட்டு சத்தம் உணர்த்தியது . அப்போதெல்லாம் சினிமா ஆரம்பம் ஆவதற்கு சுமார் அரைமணி நேரத்திற்கு முன்பாகவே கூம்பு வடிவ ஒலி பெருக்கியில் சுற்று வட்டார கிராமங்களுக்கு கேட்கும் வகையில் பாடலை ஒலிக்க விடுவார்கள் . கடைசி பாடலாக ஒரு பாடலை நிரந்தரமாக ஒலிக்கும் வகையில் அந்த பாடல்கள் ஒரே மாதிரியாக இருக்கும் .
கடைசி பாட்டு ஒலிப்பதை கேட்டால் , படம் பார்க்க அருகில் வந்து கொண்டு இருப்பவர்கள் எல்லாம் .. படம் போட்டுடுவாங்க ..ஓடியாங்க என்று ஓடோடி வருவார்கள். நாங்கள் சற்று முன்கூட்டியே வந்து விட்டதால், டிக்கெட் வாங்கி உள்ளே வந்து விட்டோம் .
தாத்தா உயரமாக வாட்ட சாட்டமாக இருப்பார். தொடர்ந்து தையல் மிஷினில் வேலை .. நீண்ட நேரம் தரையில் அமர முடியாது என்பதாலும் பெஞ்ச் டிக்கெட் வாங்கினார் . முதல் முறையாக பெஞ்ச்சில் அமர்ந்து படம் பார்க்கப்போகிறோம் என்ற உற்சாகத்தில் என்னை கையில் பிடிக்க முடியவில்லை .
ஒருவழியாக கடைசி பாடல் நிறுத்தப்பட்டு , படம் ஓட துவங்கியது .. திரையில் எம்ஜிஆரை பார்த்தவுடன் மக்கள் விசில் அடிப்பது , தரையில் அமர்ந்திருப்பவர்கள் மணலை வாரி திரையை நோக்கி வீசுவதும் ..என ஒரே ஆரவாரம் அமர்க்களப்பட்டது.
c என்று எம்ஜிஆர் சூட்கேசுடன் பாடிக்கொண்டு வந்தபோது , தரை டிக்கெட்டில் அமர்ந்திருந்த சில பேர் அந்த நேரத்திற்கு எம்ஜிஆராகவே மாறிவிட்டனர். .
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் .. என்ற பாடல் வந்தபோது தடுப்பை தாண்டி அமர்ந்திருந்த பெண்களை பார்த்து அந்தகால இளவட்டங்கள் கிண்டலாக திரையில் தோன்றிய காட்சிகளை போன்றே ஆடிக்கொண்டிருந்தார்கள்.
இடைவேளையில் கம்மர் கட் , தேன் மிட்டாய் , போட்டி என்று கை நிறைய தின்பண்டங்கள் வாங்கி கொடுத்தார் தாத்தா .

படம் முடிந்து , திரும்பும் போது வண்டிப்பாதையை ( மாற்று ) தேர்ந்தெடுத்தார். கரடு முரடான ஒத்தையடி பாதை, அமாவாசை இருட்டு பயந்து விடுவோம் என்று நினைத்து சற்று தூரம் அதிகம் என்றாலும் மாற்று பாதையில் நடக்க வைத்தார் .
தாத்தாவிற்கு பீடி பிடிக்கும் வழக்கம் என்பதால் .. கொஞ்சம் அளவுக்கதிகமாக அவ்வப்போது தீப்பெட்டியை கொளுத்துவதும் , பீடியை பற்ற வைப்பது என்று சிறு சிறு வெளிச்சங்களை உருவாக்கினார். ( இருட்டில் நாங்கள் பயந்து விடுவோம் என்று நினைத்தாரோ என்னவோ ) . தூக்கம் வருகிறது தாத்தா .. நடக்க முடியல என்று சொன்னபோது எல்லாம் .. அன்பே வா படத்தில் வந்த பாடல்களை எல்லாம் அவருக்கு ஏற்றவாறு பாடி எங்களை நடத்தி கொண்டே வந்தார்.
ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தபோது நள்ளிரவைத் தாண்டி எப்படியும் மணி இரண்டை கடந்திருக்கும் . என்னவொன்னு அதன் பிறகு சுமார் 20 ஆண்டுகள் தாத்தா இருந்தார் .. ஆனால் அவருடன் படம் பார்க்கும் வாய்ப்பு தான் அமையவில்லை.
அதிஷ்யன் மேதாவி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

















