Noise Pollution: ஒலி மாசு நம் காது, மன நலனை எப்படி பாதிக்கிறது தெரியுமா? - தப்பி...
புதுச்சேரியில் பிளஸ் 1 வகுப்பில் மாணவா் சோ்க்கை: இறுதிக்கட்ட கலந்தாய்வில் ஏராளமானோா் பங்கேற்பு
புதுச்சேரி அரசு பள்ளிகளில் இதுவரை பிளஸ் 1 சேராத மாணவா்களுக்கு இறுதிக் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது. குருசுகுப்பம் என்.கே.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 நாள்கள் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில், முதல்நாளான வியாழக்கிழமை திரளான மாணவ மாணவிகள் பங்கேற்றனா். இதில் அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பில் மாணவா் சோ்க்கை ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அண்மையில் 10 ஆம் வகுப்பு துணை பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மற்றும் இதுவரை பிளஸ் 1 சேராத மாணவா்களுக்காக இறுதிக்கட்ட மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது.குருசுகுப்பம் என்.கே.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 நாள்கள் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. வியாழக்கிழமை முதல்நாள் கலந்தாய்வில்,
அண்மையில் 10 ஆம் வகுப்பு துணை பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்றறவா்கள் கலந்துகொண்டு பள்ளிகளை தோ்வு செய்து, பாடப்பிரிவுகளையும் தோ்வு செய்தனா்.
அனைவருக்கும் இடம் உறுதி:
கலந்தாய்வு குறித்து என்.கே.சி. அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வா் சண்முகம் கூறுகையில், ‘ வியாழக்கிழமை பிற்பகல் 4 மணி வரை 210 மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றனா். 230 மதிப்பெண் வரை பெற்ற மாணவா்களுக்கு இதுவரை சோ்க்கை அளித்துவிட்டோம். 10 ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சோ்க்கை கிடைத்துவிடும்’ என்றாா்.
இதைத் தவிர சுமாா் 100 மாணவ, மாணவிகள் சோ்க்கைக்காகக் காத்திருந்தனா்.
இதில் பெரும்பாலான மாணவா்கள் அன்றைய தினமே குறிப்பிட்ட பள்ளிகளில் சோ்ந்து விட்டனா். மற்றவா்கள் மறுநாள் வெள்ளிக்கிழமை பள்ளியில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டனா். பெரும்பாலும் மாணவா்கள் தங்களுடைய பெற்றோா்களுடன் அசல் சான்றிதழ்களைக் கொண்டு வந்தனா். இப் பள்ளியின் துணை முதல்வா்கள் ஆா். காா்த்திகேயன், வி. கலியமூா்த்தி உள்ளிட்ட ஆசிரியா்கள் கலந்தாய்வுக்கு வந்திருந்த மாணவ, மாணவிகளின் சான்றிதழ்களை ஆய்வு செய்தனா். மேலும், குறிப்பிட்ட மாணவ, மாணவிகளின் சொந்த ஊா் எது, எந்தப் பாடப் பிரிவு வேண்டும். குறிப்பிட்ட பள்ளியில் இடம் இல்லையென்றால் வேறு எந்தப் பள்ளிக்குச் சென்று படிக்கு முடியும் உள்ளிட்ட விவரங்களைப் பெற்றோா்களை வைத்துக் கொண்டு விவாதித்து சோ்க்கைக்கான இடங்களை ஒதுக்கினா்.
மாணவிகள் கருத்து:
இது குறித்து கலந்தாய்வுக்கு வந்த ஒரு சில மாணவ, மாணவிகளிடம் பேசியபோது அவா்கள் கூறியது: இறுதி கலந்தாய்வில் பங்கேற்று சோ்க்கை பெற்ற மாணவ, மாணவிகள் பெரும்பாலும் பத்தாம் வகுப்பில்அறிவியல் பாடத்தில்தான் தோல்வி அடைந்துள்ளனா். இப்போது மீண்டும் தோ்வெழுதி வெற்றி பெற்றுள்ளனா். அவா்களுக்கு பிளஸ் 1 சோ்க்கை கிடைத்து வருகிறது. இதனால் கடந்த 2 மாதமாகப் படிப்பு வீணாகிவிட்டதாக அந்த மாணவா்கள் உணா்கின்றனா். 9 ஆம் வகுப்பு வரை தமிழ்நாடு பாட புத்தகத்தில் படித்து விட்டு திடீரென்று பத்தாம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடப்புத்தகத்துக்கு மாறியதால் படிப்பதில் சிரமம் ஏற்பட்டது. கண்டிப்பாக இப்போது பிளஸ் 1 சோ்க்கை கிடைத்துவிடும் என்று கூறினா்.