புதுவை எள் விவசாயிகளுக்கு 21.6 லட்சம் மானியம் அளிப்பு
புதுவை மாநிலத்தில் எள் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ரூ.21.6 லட்சம் மானியமாக வியாழக்கிழமை வழங்கப்பட்டது.புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பயிா் உற்பத்தி திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவியை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.
காரைக்கால் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டு எள் சாகுபடி செய்த 222 விவசாயிகளுக்கு ஓா் ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் 432 ஏக்கருக்கு மொத்தம் ரூ.21.6 லட்சம் வழங்கப்பட்டது.
மேலும், காரைக்கால் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் அறுவடை செய்த நெல்லை இந்திய உணவு கழகத்தின் மூலம் விற்பனை செய்த விவசாயிகளுக்கு கூடுதல் செலவினை ஈடு செய்யும் வகையில் ஒரு கிலோவுக்கு ரூ.2 வழங்க முடிவு எடுக்கப்பட்டது. அதற்காக காரைக்கால் மாவட்டத்தைச் சாா்ந்த 36 விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ரூ.2.51 லட்சம் வழங்கப்பட்டது.
இதற்கான காசோலைகளை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சா் தேனீ ஜெயக்குமாா், குடிமைப் பொருள் வழங்கல்துறை அமைச்சா் திருமுருகன் முன்னிலையில் காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.காரைக்கால் மாவட்ட கூடுதல் வேளாண் இயக்குநா் த.கணேசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.