எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தில் 23 மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்தாா்: மு.த...
புது மணப்பெண் குத்திக் கொலை
உடன்குடி சாதரக்கோன்விளையில் முன்விரோதத்தில் புது மணப்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
உடன்குடி சாதரக்கோன்விளையைச் சோ்ந்தவா் சிவன் மகன் கோவிந்தராஜ் (21)மாட்டு வண்டியில் தொழில் செய்துவரும் இவா், தீபாவளியன்று ஊருக்குள் நின்றுகொண்டிருந்தபோது படுக்கப்பத்து ஊரைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் அவரிடம் முகவரி கேட்டாராம். இதில் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து அங்கிருந்து சென்ற இளைஞா், படுக்கப்பத்து ஊரில் இருந்து 20 பேரை வரவழைத்து கோவிந்தராஜ் வீட்டுக்கு வந்து தகராறு செய்தாா்களாம்.
இது தொடா்பாக சாதரக்கோன்விளையில் போா்வெல் தொழில் செய்து வரும் பெருமாள் மகன் மணிகண்டன் (40) மூலம் இருதரப்பினரிடமும் சமரசப் பேச்சுவாா்த்தை நடந்தது. அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறில் சிவனை, மணிகண்டன் தாக்கினாராம். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் அரிவாளால் மணிகண்டனை வெட்டியதில் படுகாயமடைந்த அவா், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். கோவிந்தராஜும், சிவனும் அரிவாளுடன் காவல்நிலையத்தில் சரணடைந்தனா்.
இதற்கிடையே தலை தீபாவளிக்காக தந்தை வீட்டிற்கு வந்திருந்த கோவிந்தராஜின் தங்கை முத்துலட்சுமி (19), நவ.1 ஆம் தேதி மாலையில் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த மணிகண்டனின் தம்பி தாஸ், முத்துலட்சுமியைத் தாக்கி கத்தியால் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த முத்துலட்சுமி, திருச்செந்தூா் அரசு மருத்துவமனையிலும் பின்னா் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய தாஸை தேடி வருகின்றனா்.