பும்ரா இல்லாமல் 200 ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம்: முன்னாள் இந்திய கேப்டன்
இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாமல் 200 ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடரின் கடைசிப் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் படிக்க: முதல் பந்திலிருந்து ஆஸி.யை திணறடித்த ரிஷப் பந்த்; சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!
முன்னதாக, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உணவு இடைவேளைக்குப் பிறகு, ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச சிரமப்பட்டார். பின்னர், அவர் பெவிலியன் திரும்பினார். மீண்டும் பந்துவீச வரவில்லை. அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய அணி தடுமாறும்
இந்திய அணி 145 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில், மூன்றாம் நாளில் இந்திய அணி 200 ரன்கள் முன்னிலை பெற்றாலும் அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லையெனில் வெற்றி பெறுவது கடினம் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் 40 ரன்கள் குவித்தால் அணிக்கு 185 ரன்கள் கிடைக்கும். இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அந்த ரன்கள் போதுமானதாக இருக்கும். ஆனால், இந்திய அணி வெற்றி பெறுவது பும்ரா எந்த அளவுக்கு முழு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்பதை பொறுத்தே அமையும்.
இதையும் படிக்க: வதந்திகளை கண்டு கொள்ளாதீர்கள்; இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அறிவுரை!
ஜஸ்பிரித் பும்ரா முழு உடல் தகுதியுடன் இருக்கும்பட்சத்தில், 145 அல்லது 150 ரன்களே போதுமானதாக இருக்கும். ஆனால், ஜஸ்பிரித் பும்ரா முழு உடல் தகுதியுடன் இல்லாத பட்சத்தில், 200 ரன்கள் குவித்தாலும் வெற்றி பெறுவதற்கு அந்த ரன்கள் போதுமானதாக இருக்காது என்றார்.