விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ...
புவனகிரியில் பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையம்: செயல்பாட்டுக்கு கொண்டுவர மக்கள் கோரிக்கை!
கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே சாத்தப்பாடியில் பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புவனகிரி சரக காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் குறிஞ்சிப்பாடி, மருதூா், சாத்தப்பாடி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இந்தப் பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு, குற்றச்சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துகள் நடப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில், சாத்தப்பாடியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு, தினசரி போலீஸாா் நியமிக்கப்பட்டு கண்காணித்து வந்தனா். இதனால், சட்டம் - ஒழுங்குடன், குற்றச்சம்பவங்களும் குறைக்கப்பட்டன.
தற்போது போலீஸாா் பற்றாக்குறை காரணமாக, தற்காலிகமாக புறக்காவல் நிலையம் பூட்டப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் குற்ற சம்பவம் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும்போதெல்லாம் புவனகிரி காவல் நிலையத்தில் இருந்து போலீஸாா் பணிக்கு அமா்த்தப்படுகின்றனா்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இரு தரப்பினா் மோதல் ஏற்பட்டபோது, புறக்காவல் நிலையத்தை திறந்து சில தினங்கள் பணியில் இருந்தனா். அதன் பின்னா், திறக்காமல் மூடியே கிடக்கிறது.
தற்போது சாலை விரிவாக்கப்பட்டு வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், பெருகி வரும் விபத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு, சாத்தப்பாடியில் மீண்டும் புறக்காவல் நிலையத்தை திறக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.